பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ்: டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்
பின்புற டயர்கள் கழன்ற அரசு பஸ்: டிரைவர் சுதாரித்ததால் தப்பிய பயணிகள்
UPDATED : ஜூலை 04, 2025 07:31 AM
ADDED : ஜூலை 04, 2025 07:05 AM

மானாமதுரை: மானாமதுரையில் நேற்று அரசு டவுன் பஸ் ஓடிக்கொண்டிருந்த போது பின்பக்க டயர் தானாக கழன்றதை டிரைவர் உடனடியாக கவனித்ததால் பெரிய அளவில் ஏற்படவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று காலை குவளைவேலி கிராமத்திற்கு பயணிகளுடன் டவுன் பஸ் சென்றது. முத்தனேந்தல் அருகே சோமநாதபுரம் என்ற இடத்திற்கு அருகில் சென்ற போது பஸ்சின் பின்பக்கம் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு சென்றதை கவனித்த டிரைவர் உடனடியாக சுதாரித்து பஸ்சை நிறுத்தி பார்த்தபோது பின் பக்க டயர் கழன்று இருந்தது.
பயணிகள் மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் கவனிக்காமல் இருந்திருந்தால் டயர் கழன்று ஓடி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என பயணிகள் அச்சத்துடன் கூறினர்.
அரசு பஸ் டிரைவர்கள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசலாகவும், காயலான் கடைக்கு அனுப்பக்கூடிய நிலையில் உள்ளன. பஸ்களில் உள்ள பழுதுகளை நீக்குவதற்கு உரிய டெக்னீசியன், உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் பழுதுடனேயே பஸ்களை இயக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கீழ்நிலையில் உள்ள டிரைவர், கண்டக்டர், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆகவே தமிழக அரசும், போக்குவரத்து கழக அமைச்சரும் உடனடியாக ஓட்டை, உடைசல் பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

