உங்களில் ஒருவன்: பட்டியல் இன சமூகத்தினருக்கு பிரதமர் அளித்த முதல் மரியாதை
உங்களில் ஒருவன்: பட்டியல் இன சமூகத்தினருக்கு பிரதமர் அளித்த முதல் மரியாதை
ADDED : ஜன 25, 2024 05:22 AM

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக, குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் குரலெழுப்பத் துவங்கியிருக்கின்றனர். ஏழை எளிய மக்களின் நலனுக்கான பா.ஜ., ஆட்சி தமிழகத்திலும் வர வேண்டும் என்ற விருப்பம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. திருவிடைமருதுார், மயிலாடுதுறை, பூம்புகார் உள்ளிட்ட மூன்று சட்டசபை தொகுதிகளில் நடந்த பாதயாத்திரை பயணத்தின் போது முழுமையாக உணர முடிந்தது.
வரலாற்று சிறப்பு
பதினொரு நாட்கள் விரதம் இருந்து, பிரதமர் மோடி அயோத்தியில் பால ராமரை பிராணப் பிரதிஷ்டை செய்தார். தமிழகத்தின் பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த 35 ராமர் கோவில்கள் உள்ளன. ஆனால், ராமருக்கும், தமிழகத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கின்றனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை, தமிழக மக்கள் காணக் கூடாது என்று, தி.மு.க., அரசு விதித்த தடையை, நீதிமன்றம் சென்று முறியடித்திருக்கிறோம்.
கலக்கம்
ஓட்டு அரசியலுக்காக ஹிந்து மக்களையும், கடவுள்களையும் தவறாகப் பேசி, குளிர்காய்ந்து கொண்டிருந்த தி.மு.க.,வுக்கு, அயோத்தி ராமபெருமான் கோவில் விழா, தமிழகம் முழுதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு முறை தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிராக செயல்படும் போதெல்லாம், தமிழகத்தில் ஆன்மிக மறுமலர்ச்சி ஏற்படுகிறது. மக்களின் அடிப்படை வழிபாட்டு உரிமைகளை பறித்து, 'நாங்கள் பெருமாளையும் கும்பிடுவோம்; பெரியாரையும் கும்பிடுவோம்' என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
'ஹிந்துக்கள் விழித்துக் கொண்டால், தி.மு.க., காரன் காவடி துாக்க கூட தயங்க மாட்டான்' என்று அமரர் சோ ராமசாமி கூறியதில் பாதி உண்மையாகி விட்டது.
பெருமை
இந்தியா சுதந்திரம் அடைந்த பின், அன்றைய பிரதமர் நேருவுக்கு தமிழக ஆதீனங்களால் வழங்கப்பட்ட செங்கோலை, ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தனர். நம் பிரதமர், அந்த செங்கோலை, புதிய பார்லிமென்டின் மையக் கட்டடத்தில் வைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார்.
பட்டினப் பிரவேசம்
மதிப்புமிக்க தருமபுரம் ஆதீனத்தின் பாரம்பரிய பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை, தி.மு.க., அரசு தடை செய்தபோது, தமிழக பா.ஜ., குரல் கொடுத்தது; பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு ஆதரவாக நின்றது.
கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய ரங்கநாத சுவாமி கோவில் மண்டபத்தில், பிரதமர் அமர்ந்து கம்பராமாயணத்தை கேட்டு மகிழ்ந்தார். தமிழுக்கும், தமிழ் கலாசாரத்துக்கும் பிரதமர் மோடி வழங்கும் மதிப்பு அத்தகையது.
ஆன்மிக பூமியான தமிழகத்தில், பொது மக்களின் இறை நம்பிக்கையை தரக்குறைவாக விமர்சித்து விட்டு, எளிதில் தப்பித்து விடலாம்; எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் மீது காவல் துறை அடக்குமுறையை ஏவி விடலாம் என்ற எண்ணத்தில், இன்னும் தி.மு.க., அரசு இருந்தால், உடனடியாக அதை மாற்றிக் கொள்வது நல்லது.
வேங்கைவயல் சம்பவத்திலோ, தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த பட்டியல் சமூகப் பெண் தாக்கப்பட்டதிலோ, குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை.
எது சமூக நீதி?
சமூக நீதி என்று நாடகமாடும் தி.மு.க., கூட்டணி கட்சிகள், இது குறித்து பேசுவதே இல்லை. தி.மு.க.,வின் ஒரு குடும்பம் அதிகாரத்தில் இருக்க, தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் போடும் வேஷம் தான் சமூக நீதி.
உண்மையான சமூக நீதி என்பது, ஜனாதிபதியை தேர்வு செய்ய கிடைத்த இரண்டு வாய்ப்புகளிலும், பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடி சமூகத்தில் இருந்து இரண்டு பேரை தேர்ந்தெடுத்து, நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமையை வழங்கியது, பிரதமர் மோடி தான்.
இதுதான் உண்மையான சமூக நீதி. இப்படிதான் பட்டியல் இன சமூகத்தவர்களுக்கு பிரதமர் மோடி முதல் மரியாதை அளித்துள்ளார்.
திருபுவனம் பட்டுச் சேலைகள் ஆண்டுக்கு 465 கோடி ரூபாய் வரை விற்பனையாகின்றன. கடந்த 2019ம் ஆண்டு, திருபுவனம் பட்டுக்கு பிரதமர் மோடி புவிசார் குறியீடு வழங்கி பெருமைப்படுத்தினார்.
கடந்த 10 ஆண்டுகளில், லட்சக்கணக்கான மக்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலனடைந்துள்ளனர். அது தொடரவும், இந்தியாவின் நன்மைக்காகவும், பிரதமர் மோடி ஆட்சி மீண்டும் மலர வேண்டும். பயணம் தொடரும்...