வங்கிக்கணக்கை விலைக்கு வாங்கி ஆன்லைன் மோசடி: திணறும் போலீசார்
வங்கிக்கணக்கை விலைக்கு வாங்கி ஆன்லைன் மோசடி: திணறும் போலீசார்
ADDED : ஆக 14, 2025 04:46 AM

ராமநாதபுரம் : வடமாநிலத்தை சேர்ந்த ஆன்லைன் மோசடி கொள்ளையர்கள் புதிய யுக்தியாக, ஒருவரது வங்கி கணக்கை விலைக்கு வாங்கி, ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதால், அவர்களிடமிருந்து பணத்தை மீட்க போலீசார் சிரமப்படுகின்றனர்.
வங்கி அல்லது பிற நிதி நிறுவனம் போல் மோசடியாகக் காட்டிக்கொண்டு மக்களின் பணத்தாசையை பயன்படுத்தி, பல லட்சத்தை வடமாநில நபர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். இது போன்ற சைபர் புகார்கள் அதிகரித்து வருகின்றன. பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள வங்கி கணக்கு அடிப்படையில், குஜராத், மும்பை, பீஹார், ஜார்கண்ட் போன்ற இடங்களுக்கு குற்றவாளிகளை தேடி போலீசார் செல்கின்றனர்.
வங்கி கணக்கு நபர்களை விசாரிக்கும் போது, அவர்களது வங்கி கணக்கு பாஸ்புக், ஏ.டி.எம்., கார்டு ஆகியவற்றை, 10,000 முதல், 15,000 ரூபாய் வரை விலைக்கு வாங்கி, மர்மநபர்கள் ஆன்லைனில் மோசடியாக பண பரிவர்த்தனையில் ஈடுபடுவது தெரிந்தது. இதில் பணத்தை உடனடியாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கு மூலம் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக, 1930 என்ற எண்ணிற்கு புகார் அளித்தால், அந்த வங்கி கணக்கை உடனடியாக முடக்கி பணத்தை மீட்க முடியும்.
ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் கூறுகையில் ''தற்போது சைபர் கிரைம் புகார்கள் அதிகரித்துள்ளன. தற்போது, மொபைல்போன், சிம் கார்டு மட்டுமின்றி, வங்கி கணக்கை விலைக்கு வாங்கி, பணத்தை எடுக்கின்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்பதில் சமீபத்தில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் சி.பி.,ஐ., எனக்கூறி ஏமாற்றி, 45 வங்கி கணக்குகள் மூலம் ராமேஸ்வரத்தில், 97 லட்சம் ரூபாய் பறித்துள்ளனர். மக்கள் உஷாராக இருக்க வேண்டும்,'' என்றார்.