உங்க படத்தை பெரிதாக போடாதீங்க: கட்சியினருக்கு பழனிசாமி கட்டுப்பாடு
உங்க படத்தை பெரிதாக போடாதீங்க: கட்சியினருக்கு பழனிசாமி கட்டுப்பாடு
UPDATED : மே 31, 2025 07:06 AM
ADDED : மே 31, 2025 03:55 AM

சென்னை: 'பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை, ஜூன் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்' என, மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலர்களுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று முன்தினமும், நேற்றும் நடந்த ஆலோசனை கூட்டங்களில், 82 மாவட்டங்களை சேர்ந்த செயலர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
உயரும் செல்வாக்கு
அதில், பழனிசாமி பேசியுள்ளதாவது:
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தில் தொய்வு ஏற்படக் கூடாது. ஜூன் 15ம் தேதிக்குள் நிர்வாகிகள் நியமன பட்டியலை ஒப்படைக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக திகழ்ந்தனர். அவர்களுக்கான ஓட்டு வங்கி இருந்தது.
ஆனால், நாம் உழைத்தால் தான் ஓட்டு வங்கியை அதிகரிக்க முடியும். நான் உழைக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் தான் என்னோடு சேர்ந்து வேகமாக உழைக்க முன்வர வேண்டும்.
தி.மு.க., ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியால், பொதுமக்களிடம் அ.தி.மு.க.,வின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கட்சி பேனர், போஸ்டர்களில், மாவட்டச் செயலர்கள் தங்கள் படங்களை பெரிதாக போட்டுக் கொள்ளக்கூடாது. பேனர்களில், மாவட்டச் செயலர்கள் நிற்கும் வகையிலான புகைப்படங்கள் அச்சிடப்படக் கூடாது; அதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகைப்படங்கள் தான் பெரியதாக இருக்க வேண்டும்.
நடவடிக்கை பாயும்
சில மாவட்டச் செயலர்கள், தாங்கள் போட்டியிட விரும்பும் சட்டசபை தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். தேர்தலை மனதில் வைத்து, குறிப்பிட்ட ஒரு தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தி, கட்சி பணிகளை கவனிக்காத மாவட்டச் செயலர்கள் நீக்கப்படுவர்.
மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்படும் நிர்வாகிகளுக்கு, ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால், மாவட்ட செயலர்கள் மீது நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.