பா.ஜ., கூட்டணியால் எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி: விருந்து கொடுத்து சமாதானப்படுத்தும் இ.பி.எஸ்.,
பா.ஜ., கூட்டணியால் எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி: விருந்து கொடுத்து சமாதானப்படுத்தும் இ.பி.எஸ்.,
UPDATED : ஏப் 20, 2025 11:12 PM
ADDED : ஏப் 19, 2025 07:32 PM

பா.ஜ.,வுடன் கூட்டணி என்பது காலத்தின் கட்டாயம் எனக் கூறி, கூட்டணியால் அதிருப்தியடைந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., சமாதானப்படுத்திய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.க., தலைமை, 2023 செப்டம்பர் 26ல், கூட்டணியை முறித்துக் கொண்டது. 2024 லோக்சபா தேர்தலில், இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு தோல்வி அடைந்தன.
இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கு, 11 மாதங்கள் இருக்கும் நிலையில், கடந்த 11ம் தேதி, சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை உறுதி செய்தார். இது கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க.,வினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில். வடக்கு, மத்திய, டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க.,வினர், குறிப்பாக, அப்பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023 செப்டம்பர் 26ம் தேதி, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டியே, 'பா.ஜ.,வுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது' என, இ.பி.எஸ்., அறிவித்தார். கட்சியின் முன்னணி தலைவர்களான ஜெயகுமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி போன்றோரும் இதே கருத்தை உரக்கச் சொல்லி வந்தனர். ஆனால், அதற்கு நேர் மாறாக, மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, வரும் 2026 சட்டசபைத் தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் இ.பி.எஸ்.,
பொதுக்குழு முடிவுக்கு எதிராக, மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஒரு வார்த்தை கூட ஆலோசிக்காமல், உயர்நிலை குழு, செயற்குழு, பொதுக்குழு எதையும் கூட்டாமல், திடீரென தன்னிச்சையாக மிகப்பெரிய முடிவை பழனிசாமி எடுத்துள்ளதாக, எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அதிருப்தி குரல் எழுப்புகின்றனர்.
சமீபத்தில் சட்டசபை அ.தி.மு.க., அலுவலகத்தில், இ.பி.எஸ்.,ஐ சந்தித்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர், 'பா.ஜ.,வுடன் இனி ஒருபோதும் கூட்டணியில் இல்லை என பலமுறை உறுதியாக சொன்னீர்கள். அதை நம்பி, தொகுதியில் தேர்தல் பணிகளை செய்திருக்கிறோம். இனி பா.ஜ.,வுடன் கூட்டணி வராது என சிறுபான்மையினரிடமும் கூறி வந்தோம். திடீரென பா.ஜ., கூட்டணி என அறிவித்து விட்டீர்களே' என, தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு பதிலளித்த இ.பி.எஸ்., 'பா.ஜ.,வுடன் கூட்டணி என்பது காலத்தின் கட்டாயம். 2026ல் தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும். இல்லையெனில், நமக்கெல்லாம் எதிர்காலமே இல்லாமல் போய்விடும். தி.மு.க., கூட்டணியில் இருந்த எந்தக் கட்சியும் வெளியே வர தயாராக இல்லை. சீமான், விஜயையும் நம்ப முடியாது. அதனால்தான் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2021ல் பா.ஜ., - பா.ம.க., கூட்டணியில், 75 இடங்களில் வென்றோம். 2026ல், மேலும் சில கட்சிகளை சேர்த்து, தேர்தலை சந்திக்கும்போது, ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனாலேயே, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்து, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம்' என சமாதானப்படுத்தியதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
விருந்தும் பரிசும்
ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வரான இ.பி.எஸ்., எம்.எல்.ஏ.,க்களை நன்றாக கவனித்து வந்தார். ஆனால், 2021ல் எதிர்க்கட்சியான பின், எம்.எல்.ஏ.,க்களை கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ.,க்கள், இப்போது பா.ஜ., கூட்டணி அறிவிப்பால், மேலும் விரக்தி அடைந்துள்ளனர். இதை அறிந்த இ.பி.எஸ்., வரும் 23ம் தேதி தனது சென்னை இல்லத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க இருப்பதாகவும், அவர்களுக்கு விரும்பிய உணவுடன் கூடிய விருந்தும், பரிசும் அளித்து உபசரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-நமது நிருபர்-