செப்., 4ல் கட்சி பெயரை அறிவிக்கிறார் பன்னீர்? விஜய் சரியாக செயல்படுவதாகவும் பாராட்டு!
செப்., 4ல் கட்சி பெயரை அறிவிக்கிறார் பன்னீர்? விஜய் சரியாக செயல்படுவதாகவும் பாராட்டு!
UPDATED : ஜூலை 15, 2025 10:34 AM
ADDED : ஜூலை 15, 2025 01:38 AM

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி சார்பில், மதுரையில் செப்., 4ல் மாநில மாநாடு நடக்க உள்ளது.
அதற்கு முன்பாக அ.தி.மு.க.,வில் இணைக்க பழனிசாமி முன்வராவிட்டால், புதிய கட்சி துவக்குவது தொடர்பான அறிவிப்பை, மாநாட்டில் பன்னீர்செல்வம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு' நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை வேப்பேரியில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், பன்னீர்செல்வம் பேசியதாவது:
தற்போதுள்ள சூழலில், கட்சி பல்வேறு பிரச்னைகளில் சிக்கி உள்ளது. அ.தி.மு.க.,வை சிக்கலில் இருந்து மீட்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிமை மீட்பு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம்.
இதில், நாம் இதுவரை வென்றிருக்கிறோம். எதிர்காலத்தில் வெற்றி பெறுவோம். அரசியல் ரீதியான கட்சிகளுக்கு, அக்கட்சி சார்ந்த உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பர்.
ஆனால், பொதுமக்களுடைய நன்மதிப்பை, எந்த கட்சி தலைவர் பெறுகிறாரோ, அவரால் தான் ஆளும் உரிமையை பெற முடியும்.
மக்கள் ஆதரவை பெற்று, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சாதனை படைத்தனர். அந்த வரலாற்றை நாம் மீண்டும் உருவாக்க வேண்டும். எனவே தான், இந்த தர்மயுத்தத்தை நடத்தி வருகிறோம்.
கட்சி தலைமை நிர்வாகிகளின் கருத்துக்கள் அடிப்படையில், சில முடிவுகளை எடுத்துள்ளோம். சில முடிவுகள் வெளியில் சொல்ல முடியாதவையாக உள்ளன.
அந்த முடிவுகளின்படி, மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம், மாநில மாநாடு போன்றவை விரைவில் நடத்தப்படும். அ.தி.மு.க., எந்த மாநாடு நடத்தினாலும், அது வரலாறு படைக்கும்.
அதுபோலவே வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய மாநாடாகத்தான், நாம் நடத்தப் போகும் மாநாடும் இருக்கும். அதுவே நம்மை உருவாக்கிய தலைவர்களுக்கு, நாம் செய்யும் நன்றி.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில் ஒரு குழு சென்று, கட்சி செயல் வீரர்கள் கூட்டங்களை நடத்தும்.
கூட்டத்தில், முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படும். கட்சியினர் கூறும் கருத்துக்களையும், தலைமைக்கு கொண்டு வந்து சேர்ப்பர். முதல் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கும்.
அனைத்து மாவட்டங்களிலும், செயல்வீரர்கள் கூட்டம் நடத்திய பின், மதுரையில் செப்., 4ல் மாநில மாநாடு நடத்தப்படும்.
இந்த மாநாட்டில், நம் அனைத்து நிலைகளிலும், தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:
நம் அரசியல் பாதை தெளிவாக உள்ளது. இந்த பாதையில் முன்னேற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. முதல் படியாக, ஒரு மாநாட்டை நடத்த முடிவு செய்து உள்ளோம்.
இது வெறும் கூட்டமாக முடியப் போவதில்லை. கொள்கை வகுத்து, அதை நிறைவேற்றப் போகிறோம். இந்த மாநாட்டில், நம் எதிர்காலத் திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.
நாம் யார் பின்னாலும் போகப் போவதில்லை. நாம் யாரையும் எதிர்பார்த்து அரசியல் நடத்தவில்லை. அமைச்சரவையோ, முதல்வர் பதவியோ எங்களுக்கு புதிதல்ல.
பலர் இன்னும் பதவிக்காக துடித்து கொண்டிருக்கின்றனர். அதனால் தான், கட்சியின் நிலை மோசமடைந்துள்ளது.
இன்றைய சூழலில், அரசியலுக்கு புதிய வரவாக இருக்கும் நடிகர் விஜய், இதுவரை சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தேவையானால், எதிர்காலத்தில் அவரோடும் சேர்ந்து செயல்படும் சூழல் உருவாகலாம். அதனால், யாரும் எதிர்காலம் குறித்த கவலையின்றி, சிறப்பாக தங்களுடைய பணியை தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.