பன்னீர்செல்வம் தனித்து நிற்பதே சாதகம்; ரகசிய ஆய்வுக்கு பின் தி.மு.க., முடிவு
பன்னீர்செல்வம் தனித்து நிற்பதே சாதகம்; ரகசிய ஆய்வுக்கு பின் தி.மு.க., முடிவு
ADDED : ஜன 31, 2026 04:52 AM

சென்னை: 'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனித்து நிற்பதே தி.மு.க.,விற்கு சாதகம்' என, ரகசிய ஆய்வுக்கு பின், தி.மு.க., முடிவு செய்துள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கைவிரித்து விட்டார்.
சமுதாய ஓட்டுகள்
தனி கட்சி துவங்கினால், கூட்டணியில் சேர்த்து 'சீட்' வழங்குவதாக பன்னீர்செல்வத்திடம் பா.ஜ., தலைமை கூறியது. இதை பன்னீர்செல்வம் நிராகரித்து விட்டார்.
இதையடுத்து, பன்னீர்செல்வத்தை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்த தி.மு.க., தலைமை முடிவு செய்தது. அவரை கூட்டணியில் சேர்த்து, மூன்று தொகுதிகள் வழங்கவும் பரிசீலித்தது.
இதன் வாயிலாக தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என தி.மு.க., கணக்கு போட்டது.
இந்நிலையில், தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் சேர்ந்தாலோ, கூட்டணி வைத்தாலோ, அவரது ஆதரவு ஓட்டுகள் தி.மு.க.,விற்கு கிடைக்காது என, தி.மு.க., நடத்திய ரகசிய சர்வேயில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
பன்னீர்செல்வம் என்றாலே இரட்டை இலை சின்னம் என்ற எண்ணம், முக்குலத்தோர் சமுதாய மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது.
இதனால் தான், கடந்த லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார்.
மேலும், அவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக தென் மாவட்ட மக்கள் பார்க்கின்றனர். எனவே, தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் சேர்ந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், வழக்கமாக அவருக்கு கிடைக்கும் ஓட்டுகள் கிடைக்கா து.
அனுதாபம்
அதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் இருந்து ஓரங்கப்பட்ட பன்னீர்செல்வம் தனித்து நின்றால், அவர் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்படும். அ.தி.மு.க., ஆதரவு ஓட்டுகளை அவர் பிரிப்பதால், தி.மு.க., வெற்றியை எளிதாக்கும்.
பன்னீர்செல்வம் போட்டியிடாமல் ஒதுங்கினாலும், இதுதான் நடக்கும். எனவே, பன்னீர்செல்வத்தை தனித்து நிற்க வைக்கும் முடிவுக்கு, தி.மு.க., த லைமை வந்துவிட்டது. இவ்வாறு அவ்வட்டாரம் தெரிவித்தது.

