ஜெ., அறிவித்த பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை முடக்கி மார்க்கெட், லாரி பேட்டையாக்குகிறது மாநகராட்சி
ஜெ., அறிவித்த பஸ் ஸ்டாண்ட் திட்டத்தை முடக்கி மார்க்கெட், லாரி பேட்டையாக்குகிறது மாநகராட்சி
UPDATED : டிச 29, 2024 05:59 AM
ADDED : டிச 29, 2024 12:55 AM

கோவை,:கோவை மாநகராட்சி சார்பில், வெள்ளலுாரில், 61.62 ஏக்கரில், 168 கோடியில், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது.
இதில், 50 சதவீத தொகையான, 84 கோடியை தமிழக அரசு வழங்கும்; மீதமுள்ள, 84 கோடியை மாநகராட்சி பொதுநிதியில் இருந்தோ அல்லது வங்கியில் கடன் பெற்றோ, செலவழித்துக் கொள்ள அறிவுறுத்தப் பட்டது.
பிரதான கட்டடம் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கான பே மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது; 37 சதவீத பணி முடிந்திருக்கிறது; மாநகராட்சி பங்களிப்பில் 52.46 கோடி செலவிடப்பட்டது. தமிழக அரசின் பங்களிப்பு தொகை, 84 கோடி விடுவிக்கப்படவில்லை.
2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதிர்ச்சியடைந்த மக்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி பார்க்காமல், மீதமுள்ள நிதியை ஒதுக்கி, பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தும், ஒன்றும் நடக்கவில்லை.
வளர்ச்சி அடையும்
நவ., 5ல் முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தபோது, அவரது கவனத்துக்கு கொண்டு செல்ல, நம் நாளிதழில் படத்துடன் இந்த செய்தி வெளியிடப்பட்டது. அதிகாரிகளிடம் முதல்வர் விசாரித்த போது, மாநகராட்சி அதிகாரிகள் முதல்வருக்கு சரியாக விளக்கி கூறவில்லை.
தற்போது காய்கறி மற்றும் பழ மார்க்கெட், லாரி பேட்டையாக பஸ் ஸ்டாண்டை மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த பஸ் ஸ்டாண்ட், எல் அண்டு டி பைபாஸில் இருந்து, 1.95 கி.மீ., துாரத்திலும், நகர மையத்தில் இருந்து, 8.25 கி.மீ., துாரத்திலும் அமைந்திருக்கிறது.
ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைந்தால், தெற்குப்பகுதி வளர்ச்சி அடையும். நீலாம்பூரில் அமையும் 'மெட்ரோ ரயில் டெப்போ'வுக்கு பயணியர் எளிதாக செல்ல முடியும்.
பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் முன் சாத்தியக்கூறுகளை, அ.தி.மு.க., ஆட்சியில் பணிபுரிந்த மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், நிதித்துறை செயலர் மற்றும் 'டுபிட்சல்', 'டுபிட்கோ' உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கள ஆய்வு செய்து, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்ட அனுமதி அளித்தனர்.
முரண்பாடு
அதன் பிறகே பணி துவங்கியது. அ.தி.மு.க., ஆட்சியில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும் உயர் பொறுப்பில் உள்ளனர்.
ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பஸ் ஸ்டாண்ட் செயல்பட தகுதியான இடமில்லை எனகூறுவது முரண்பாடாக இருக்கிறது.
இதற்குமுன் பணிபுரிந்த அதிகாரிகள், பஸ் ஸ்டாண்ட் கட்ட அனுமதி அளித்தது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.
இச்சூழலில், பஸ் ஸ்டாண்ட் கட்டுமானத்தை மார்க்கெட் மற்றும் லாரிபேட்டை உபயோகத்துக்கு மாற்றும் தீர்மானம், வரும், 30ம் தேதி மாநகராட்சியில் நடைபெற உள்ள கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற உள்ளது.
பஸ் ஸ்டாண்டை ஏன் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை என்பதற்கான காரணத்தை, மாநகராட்சி நிர்வாகம் சொல்லவில்லை. இதிலிருந்தே திட்டமிட்டு, தெற்குப்பகுதியை தி.மு.க., அரசு புறக்கணிக்கிறதா என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.