தேர்தலை எதிர்கொள்ள பா.ம.க., புது வியூகம்; அரசு பணியில் உள்ள வன்னியர்களை திரட்ட முயற்சி
தேர்தலை எதிர்கொள்ள பா.ம.க., புது வியூகம்; அரசு பணியில் உள்ள வன்னியர்களை திரட்ட முயற்சி
ADDED : அக் 25, 2025 04:36 AM

வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, பா.ம.க., புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. அரசு துறைகளில் பணிபுரியும் வன்னியர்களை ஒருங்கிணைத்து, தேர்தல் பணி செய்வது குறித்து, ரகசிய கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆளும்கட்சியான தி.மு.க.,வை அடுத்து, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.,வும் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகின்றன.
இப்படி அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணியில் சுறுசுறுப்பு காட்ட துவங்கிய நிலையில், பா.ம.க.,வில் இன்றும் அப்பா - மகன் பிரச்னை நீடித்து வருகிறது.
கடந்த 2024 டிச., 28ம் தேதி, புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக் குழுவில், அப்பா --- மகன் இடையே வெடித்த மோதல் இன்றும் நீடிக்கிறது. மோதல் இனியும் நீடித்தால், அது கட்சியை பலவீனப்படுத்தும்; என, அக்கட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
இதற்கிடையில், அரசு துறையில் பணிபுரியும் வன்னியர்களை ஒருங்கிணைத்து, தேர்தலுக்கு சாதகமாக செயல்பட செய்வது குறித்த ரகசிய கூட்டம், ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. இவை அனைத்தும், அன்புமணி தரப்பு ஏற்பாட்டில் நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில், தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் வன்னியர்கள் பங்கேற்று வருகின்றனர். 'ப்ரண்ட்ஸ் ஆப் எஜுகேஷன்' என்ற பெயரில், இந்த கூட்டம் நடந்து வருகிறது.
இது குறித்து, பா.ம.க., வட்டாரங்கள் கூறியதாவது:
'ப்ரண்ட்ஸ் ஆப் எஜுகேஷன்' என்ற பெயரில், அரசு ஊழியர்களை ஒருங்கிணைக்கும் கூட்டம், கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதுவரை செஞ்சி, தர்மபுரி, கடலுார், பல்லாவரம் ஆகிய இடங்களில் வார கடைசி நாட்களில் நடத்தப்பட்டுள்ளது.
இதில் சேர்வதற்கு, 'கூகுள் டாக்ஸ்' வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். வருபவர்களுக்கு உணவு, தங்குமிடம் வசதி செய்து தரப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பெயர், பணிபுரியும் துறை, ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது, பா.ம.க.,வுக்கு ஆதரவாக எப்படி செயல்படுவது என்பது குறித்தும், இக்கூட்டத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வரும் நவ., 1ம் தேதி திருவண்ணாமலையில், அடுத்த கூட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

