த.வெ.க.,வுக்கு 78 மா.செ.,க்கள் 'வந்தவர்'களுக்கு முன்னுரிமை
த.வெ.க.,வுக்கு 78 மா.செ.,க்கள் 'வந்தவர்'களுக்கு முன்னுரிமை
ADDED : நவ 20, 2024 05:19 AM

நடிகர் விஜய் தலைமையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டு, கடந்த மாதம் முதல் மாநில மாநாடும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக நியமிக்கப்படவில்லை என்பதால், அடுத்த மாதத்திற்குள், 78 மாவட்ட செயலர்களை நியமிக்க, விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.
அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: வரும் ஜனவரியில், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் சென்று, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்க, விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்குள் ஓட்டுச்சாவடி அளவில் நிர்வாகிகளை நியமிக்குமாறு, விஜய் உத்தரவிட்டுள்ளார். ரசிகர் மன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்களிடம், இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க., - அ.தி.மு.க., போன்று, உள்ளூரில் செல்வாக்கு பெற்றவர்களை தேர்ந்தெடுத்து, மாவட்டச் செயலர்களாக நியமிக்க, விஜய் விரும்புகிறார். 234 சட்டசபைத் தொகுதிகளையும் முக்கியமாக வைத்து, மா.செ.,க்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்று சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கி, ஒரு மாவட்ட செயலர் நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கி உள்ளன. எந்தெந்த தொகுதிகள், எந்த மாவட்டத்தில் இடம்பெற வேண்டும் என, பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகம் முழுதும் த.வெ.க.,வுக்கு 78 மா.செ.,க்கள் நியமிக்கப் பட உள்ளனர். நீண்ட காலம் தன்னோடு பயணித்த ரசிகர் களுக்கு, முன்னுரிமை கொடுக்க விஜய் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், விஜய் அரசியல் ஆலோசகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வேறு அரசியல் இயக்கங்களில் முழுநேர அரசியல்வாதியாக இருந்தவர்கள் பலரும், த.வெ.க.,வில் தற்போது இணைந்துள்ளனர். அவர்களில் தகுதியானவரை தேர்ந்தெடுக்கலாம் என்பதே அவர்களின் பரிந்துரை.
மன்றத்தில் நீண்ட காலம் பொறுப்பில் இருந்தவர்களுக்கு, விரைவில் ஏற்படுத்த உள்ள அணிகளில் பொறுப்பு வழங்கலாம் என்ற ஆலோசனையையும், விஜய் 'ஓகே' செய்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

