தி.மு.க.,வுடன் ராமதாஸ்; அ.தி.மு.க.,வுடன் அன்புமணி: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க ரகசிய பேச்சு?
தி.மு.க.,வுடன் ராமதாஸ்; அ.தி.மு.க.,வுடன் அன்புமணி: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க ரகசிய பேச்சு?
ADDED : ஜூலை 07, 2025 01:01 AM

த.வெ.க.,வுடன், அன்புமணி தலைமையிலான பா.ம.க., இடம் பெறாமல் தடுக்க, 40 தொகுதி, ஒரு ராஜ்யசபா 'சீட்'டும் வழங்க, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரம், தி.மு.க., பக்கம் செல்ல ராமதாஸ் அணி பா.ம.க., தலைவர்கள் ரகசிய பேச்சு நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய் துவக்கி உள்ள த.வெ.க., வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப, தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை மட்டும் விஜய் கடுமையாக விமர்சித்து வந்தார்.
70 தொகுதிகள்
ஆனால், சமீபத்தில் நடந்த த.வெ.க., செயற்குழு கூட்டத்தில், 'வரும் சட்டசபை தேர்தலுக்கு, த.வெ.க., தலைமையில் கூட்டணி அமையும்; விஜய் தான் முதல்வர் வேட்பாளர்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் கேட்டபோது, ''தி.மு.க., ஆட்சியை அகற்ற விரும்பும் யாரும், எங்கள் கூட்டணிக்கு வரலாம்,'' என, விஜய்க்கும் மறைமுகமாக அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், அன்புமணி தலைமையிலான பா.ம.க.,வுக்கு 70 தொகுதிகள் தருவதாகக் கூறி, த.வெ.க., தரப்பில் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.
இத்தகவல் பழனிசாமிக்கு தெரிய வந்ததும், அ.தி.மு.க., கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., இடம் பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரும், அன்புமணியின் குடும்ப உறுப்பினர் ஒருவரும் சந்தித்து பேச்சு நடத்தி உள்ளனர். அப்போது, பா.ம.க.,வுக்கு 40 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக, அ.தி.மு.க., தரப்பில் பேசியதாக கூறப்படுகிறது.
பச்சைக்கொடி
இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., மட்டும் இடம் பெற்றுள்ளது. பா.ம.க.,வில் ராமதாஸ் அணி, தி.மு.க.,வை ஆதரிக்கும் வகையில் செயல்படுகிறது.
இந்நிலையில், ராமதாஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் பா.ம.க., தலைவர்கள் சிலர், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர்.
அங்கே, உரிய மரியாதை அளிக்கும் பட்சத்தில், அப்படியொரு முடிவெடுக்கலாம் என ராமதாசும் கட்சியினருக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார்.
ஆனால், அன்புமணி அணி தே.ஜ., கூட்டணியில் நீடிக்க விரும்புகிறது. இருப்பினும், விஜய் தரப்பில் அன்புமணியை கூட்டணிக்கு அழைப்பதால், அ.தி.மு.க., கூட்டணியில் அன்புமணியை தக்க வைக்க பழனிசாமி விரும்புகிறார்.
குழப்பம்
ஏனெனில், இடைப்பாடி தொகுதியில், அன்புமணி பா.ம.க., ஆதரவு இருந்தால் தான், பழனிசாமியால் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
மேலும், வட மாவட்டங்களில் உள்ள 60 தொகுதிகள், டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகள் சேர்த்து, மொத்தம் 90 தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றிக்கு, அன்புமணி தலைமையிலான பா.ம.க., கூட்டணி தேவைப்படுகிறது.
எனவே, பா.ம.க.,வை தக்க வைக்க, பழனிசாமி அவசரமாக கூட்டணி பேச்சை துவக்கி உள்ளார். அதேநேரம், ராமதாஸ் மாற்றி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதால், இரு தரப்பிலும் குழப்பம் நிலவுகிறது.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -