ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவை முடக்கிய சார் - பதிவாளர்கள்; பொதுமக்கள் ஏமாற்றம்
ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவை முடக்கிய சார் - பதிவாளர்கள்; பொதுமக்கள் ஏமாற்றம்
ADDED : பிப் 03, 2025 05:51 AM

சென்னை : 'முகூர்த்த நாளான நேற்று பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்' என, பதிவுத்துறை அறிவித்த நிலையில், பல்வேறு பகுதிகளில் சார் - பதிவாளர்கள் ஒத்துழைக்காததால், அலுவலகம் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தமிழகத்தில், 585 சார் -- பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை, அலுவலக வேலை நாட்களில் மட்டும் பத்திரப்பதிவு நடந்து வந்தது.
சனிக்கிழமையன்று, 100 அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இதற்கான வழிமுறைகளை பதிவுத்துறை உயர் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். முதல் கட்டமாக, 'முகூர்த்த நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை, அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும்' என பதிவுத்துறை அறிவித்தது.
இதை நம்பி நேற்று சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு பலர் சென்றனர். ஆனால், பெரும்பாலான அலுவலகங்கள் திறக்கப்படவில்லை; பத்திரப்பதிவுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து சார் - பதிவாளர்கள் கூறியதாவது: பதிவுத்துறை ஐ.ஜி.,யும், துறையின் செயலரும் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். சார் - பதிவாளர்கள் உள்ளிட்ட எந்த அமைப்பினரிடமும், இதுகுறித்து கருத்து கேட்கவில்லை. பெரும்பாலான சார் - பதிவாளர்கள், ஊழியர்கள் வேறு ஊர்களில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் சனி, ஞாயிறன்று தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். போதிய அவகாசம் அளிக்காமல், திடீரென ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால், சார் - பதிவாளர்கள், மற்ற ஊழியர்களும் பணிக்கு வரவில்லை.
குறிப்பிட்ட சில சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததால், பெரும்பாலான அலுவலகங்கள் திறக்கப்படவில்லை.
டி.ஐ.ஜி.,க்கள் உத்தரவு காரணமாக, சேலம், தஞ்சை மண்டலங்களில் பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்படவில்லை. வரும் காலங்களில், இது போன்ற முடிவுகளை முறையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு என்பது கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. நடப்பாண்டு, 10க்கும் மேற்பட்ட பண்டிகை நாட்களும், முகூர்த்த நாட்களும் ஞாயிற்றுக்கிழமையன்று வருகின்றன.
முகூர்த்த நாளில் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பு. அதை செயல்படுத்த வேண்டியது, துறை அதிகாரிகளின் பொறுப்பு. முதல்கட்டமாக முக்கியமான, 10 ஞாயிற்றுக்கிழமைகளில் தான், பத்திரப்பதிவு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதில், அதிகாரப்பூர்வமற்ற வகையில், பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்திய அமைப்புகள், அதில் பங்கேற்றவர்கள் மீது நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் கூறினார்.