ADDED : பிப் 16, 2025 02:11 AM

ஆங்கிலேய ஆட்சி, நம் நாட்டை நவீன பாதைக்கு இட்டுச்சென்றது என்பது நமக்கு, பிரதமர் நேரு காலத்தில் இருந்து புகட்டப்படும் பாடம். ஆங்கிலேயர்களால் தான் அனைவருக்கும் கல்வி கிடைத்தது, பின்தங்கிய நம் சமூகத்தில் பல சீர்திருத்தங்கள் வந்தன என்ற கருத்துக்கள் எல்லாம், மேற்படி சிந்தனையின் அங்கங்கள்.
ஆங்கிலேயரின் கல்வி திட்டத்திலும், வெளிநாடுகளிலும் கல்வி பெற்ற நேரு காலத்து ஆட்சியாளர்கள் மத்தியில், அந்த சிந்தனை எவ்வளவு ஊடுருவி இருந்தது என்பதை அரசியலமைப்பு பேரவையில், அம்பேத்கர் வைத்த வாதத்தில் பார்க்கலாம்.
கிராமம் என்பது என்ன? வெறும் அறியாமை, குறுகிய மனப்பான்மை மற்றும் இனவாதத்தின் சேர்க்கை.
மேற்கத்திய சிந்தனை உள்ளவர்களிடம் இப்படிப்பட்ட கருத்தே இருந்தது. அவர்கள், நகரங்களில் அதிகாரம் குவிக்கப்பட வேண்டும் என்று நம்பினர். அதே நேரம், காந்திய சிந்தனை உள்ளவர்கள் கிராமங்களை மையப்படுத்தி அதிகாரம் இருக்க வேண்டும் என்றனர்.
இறுதியில், மேற்கத்திய சிந்தனை உள்ளவர்களின் வாதம் தான் வென்றுள்ளது என்பது இன்றைய நிதர்சனம். பெயரளவில் மட்டும் கிராம சுயாட்சி உள்ளது. காந்தியவாதிகளின் வாதத்தை போல், ஆங்கிலேயரின் வருகைக்கு முன், கிராமங்களில் தான் அதிகாரம் குவிந்திருந்தது என்று தற்போதைய மீளாய்வுகள் காட்டுகின்றன. அதிகாரம் குவிந்திருந்தது மட்டும் அல்லாமல், அம்பேத்கரின் வாதத்திற்கு மாறாக, சிறப்பான சுயாட்சி நடந்தது என்றும் காட்டுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் மீளாய்வுகள், ஆங்கிலேயரால், சுயலாபத்திற்காக போதிக்கப்பட்டு, நேரு காலத்து இடதுசாரி ஆய்வாளர்களால் பிரதிபலிக்கப்பட்ட கருத்துக்கள் மீது புது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
அப்படிப்பட்ட மீளாய்வு ஒன்று தான் உள்ளாவூர் மற்றும் குன்றத்துார் என்று தலைப்பிட்ட இரண்டு நுால்களாக ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கிறது. உள்ளாவூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமம். குன்றத்துார் சென்னையை அடுத்துள்ள நகரப்பகுதி. இந்த நுால்களில் அந்த கிராமங்களின் சமூக அமைப்பு, நிர்வாக முறை, பொருளாதாரம் என அன்றைய சமூகம் பற்றி பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளன.
தவிர, இன்றைய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்கள் இணைந்த பழைய செங்கல்பட்டு மாவட்டம் பற்றியும் சுவாரசியமான தகவல்களை தருகின்றன.
சென்னையில் உள்ள சென்டர் பார் பாலிசி ஸ்டடீஸ் என்ற ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எம்.டி.ஸ்ரீநிவாஸ் மற்றும் ஜதீந்தர் கே பஜாஜ் இந்த ஆய்வை நடத்தினர். இவர்களில் எம்.டி.ஸ்ரீநிவாஸிற்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர் காலத்திற்கு சற்று முன் நம் நாடு எப்படி இருந்தது என்பது பற்றிய தொடர் தேடலில் ஈடுபட்டுள்ள இவர்கள் ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்போரூர் மற்றும் வடக்குப்பட்டு ஊர்களை பற்றி ஆய்வு நுால்களை வெளியிட்டு உள்ளனர்.
நம் கிராமங்கள் எப்படி இயங்கின என்பதை புரிந்துகொள்ள, செங்கல்பட்டு ஜாகிர் பற்றி அந்த நுால்களில் இருந்து தொகுக்கப்பட்ட தகவல்களை பார்ப்போம்.
ஆங்கிலேய ஆவணங்கள்
பல்லவர்களின் தலைநகரமாக இருந்த காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகள் தொண்டை மண்டலம் என அறியப்படுகிறது. இந்த பகுதி, தமிழர்களின் ஆட்சியில் இருந்து 13ம் நுாற்றாண்டில் விலகியது.
பின், டில்லி சுல்தானகம், நாயக்கர்கள், முகலாயர் என கைமாறிக்கொண்டே இருந்தது. 18ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் (1700களில்) ஆற்காடு நவாப் ஆட்சியில், 180 கி.மீ., நீளம், 80 கி.மீ., அகலமுள்ள இந்த வளைவான பகுதி இருந்தது.
தனக்கு போரில் உதவியதற்காக, அப்போதைய நவாப் முகமது அலி, 1763ல், கிழக்கிந்திய கம்பெனியிடம் இந்த பகுதியில் வரி வசூல் செய்யும் உரிமையை கொடுத்தார்.இந்த வகை நிலங்களை இனாம் அல்லது ஜாகிர் என்பதுண்டு. ஆங்கிலேயர், இந்த ஜாகிரை செங்கல்பட்டு ஜாகிர் என்றே குறிப்பிட்டனர். அதுவே கடந்த 2003 வரை செங்கல்பட்டு மாவட்டமாகவும் தொடர்ந்தது.
வரி வசூல் செய்வதற்காக, ஜாகிர் நிலத்தின் அமைப்பை அறிய, கிழக்கிந்திய கம்பெனி தாமஸ் பார்னார்ட் என்ற பொறியாளரை பணித்தது. அவருக்கு உதவியாக செங்கல்வராய முதலியார் என்பவர் துபாஷாக நியமிக்கப்பட்டார்.
இருவரும், 1767 முதல் 1774 வரை ஆய்வு செய்தனர். செங்கல்வராய முதலியார், கணக்குப்பிள்ளைகளிடம் இருந்த ஓலைச்சுவடிகளை திரட்டினார். இவை சுருணை ஏடுகளாக இருந்தன. வழக்கமாக இலக்கியங்கள் சமய விஷயங்களை ஓலையில் எழுதும்போது, 40 செ.மீ.,க்கு 20 செ.மீ., என்ற அளவில் சீரான துண்டுகளாக ஓலை நறுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு இருக்கும்.
ஆனால், ஊர் கணக்கு ஓலைகள் நறுக்கப்படாமலும், பதப்படுத்தப்படாமலும், 1 மீட்டர் நீளமும், 3-4 செ.மீ., அகலமும் கொண்ட நீண்ட சுருள்களாக இருக்கும். இவற்றின் கொத்துக்களை சுருணை ஏடுகள் என்பதுண்டு.
ஒவ்வொரு ஏட்டிலும் ஏறத்தாழ 600 ஓலைகள் கொண்ட 20 ஏடுகளை செங்கல்வராய முதலியார் சேகரித்தார். இந்த ஏடுகளில், 1767 முதல் 1774 வரையிலான காலகட்டத்திற்கு 1,500 கிராமங்கள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. அவற்றில் 1,000 கிராமங்கள் பற்றிய தகவல்கள் முழுமையாக உள்ளன.
இந்த ஏடுகளில், மாகாணம், சீமை, கிராமத்தின் பெயர்கள், ஆவணம் எழுதப்பட்ட தேதி, கடைசியாக எழுதியவர் பெயர், ஏட்டு பக்க எண் என, அனைத்து தகவல்களும் சீராக உள்ளன. அதனால், இவை அனைத்தும், இன்றைய பதிவுத்துறை அதிகாரிகள் போல பயிற்சி பெற்றவர்களால் எழுதப்பட்டது என்று அனுமானிக்கலாம்.
சுருணை தவிர, ஜாகிரில் இருந்த மேலும் 600 கிராமங்களின் தகவல்களையும் திரட்டி, 24,000 பக்கங்களில், 2,100 கிராமங்கள் பற்றிய ஆய்வு அறிக்கையை தயார் செய்தனர். அதில், 1,910 கிராமங்கள் பற்றிய தகவல்கள் ஓரளவிற்கு முழுமையாக உள்ளன.
இந்த அறிக்கை தான் தற்போதைய ஆவண காப்பகத்தில், 'போர்ட் ஆப் ரெவின்யூ மிசலேனியஸ்' பிரிவில் 30 தொகுதிகளாகவும், 'செங்கல்பட்டு டிஸ்ட்ரிக்ட் ரெக்கார்ட்' பிரிவில் 10 தொகுதிகளாகவும் பாதுகாக்கப்படுகிறது.
சுருணை ஏடுகளோ செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மூட்டையில் வைக்கப்பட்டு செல்லரித்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலையால் மீட்கப்பட்டன.
இந்த மாபெரும் அறிக்கையில் மற்றும் ஓலைகளில், நம் கிராமங்களின் பொருளாதார நிலை, நிர்வாகம் மற்றும் சமூகம் பற்றி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
நில பயன்பாடு
செங்கல்பட்டு ஜாகிரில் 1,910 கிராமங்கள் இருந்தன. அவற்றில் 1,550 கிராமங்களில் மட்டுமே குடியிருப்புகள் இருந்தன.
மொத்தம் 7.80 லட்சம் காணி நிலம் இருந்தது (10.37 லட்சம் ஏக்கர்). ஒரு காணி என்பது, 1.33 ஏக்கர்.
அதில், ஆறில் ஒரு பங்கில் மலை, ஆறு, மணல், கல்மேடு, சதுப்பு என, வரி வசூலுக்கு பயனில்லாத நிலமாக இருந்தது.
மேலும், ஆறில் ஒரு பங்கு நிலத்தில் காடுகள் இருந்தன. எட்டில் ஒரு பங்கு நிலத்தில் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், மதகு, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளாக இருந்தன. 1,910 கிராமங்களில், 1,750 கிராமங்கள் சொந்தமாக நீர்நிலைகளை உருவாக்கி இருந்தன. 30ல் ஒரு பங்கு நிலத்தில் வீடுகள், வீதிகள், தெருக்கள், பொதுக்கட்டடங்கள், கோட்டைகள், சத்திரம், சாவடிகள் உள்ளிட்ட நத்தம் எனும் வசிப்பிடங்களாக இருந்தன.
இவற்றின் அளவு 31,920 ஏக்கர். மீதமுள்ள 5.05 லட்சம் ஏக்கர் விளைநிலங்களாக இருந்தன. அதில், 3.20 லட்சம் ஏக்கர் நன்செய் நிலமாக இருந்தது! அதில், நான்கில் ஒரு பங்கு வரி நீக்கப்பட்ட மானிய நிலமாக இருந்தது.
தானிய உற்பத்தி
நாட்டில் நீர்வளம் மிகுந்த கங்கை, யமுனை சமவெளிகளைப் போல அமைப்பை பெறாத கடற்கரை ஓரமான செங்கல்பட்டு ஜாகிர், அந்த பகுதிகளுக்கு கொஞ்சமும் குறையாத அளவில் தானிய உற்பத்தியை செய்தது.
சராசரியாக, 2 லட்சம் காணி நிலத்தில் (2.66 லட்சம் ஏக்கர்) 20 லட்சம் கலம் (2.50 லட்சம் டன்) நெல் விளைவிக்கப்பட்டது. ஒரு கலம் 125 கிலோவுக்கு சமம். ஒரு ஏக்கருக்கு ஒரு டன் விளைச்சல் சாதாரணமாக இருந்தது. சில கிராமங்களில், ஏக்கருக்கு 3.50 டன் விளைச்சல் இருந்ததும் பதிவாகி உள்ளது.
மொத்த ஜாகிருக்கு தேவையான உற்பத்தி 65 கிராமங்களின் உற்பத்திக்கு சமமாக இருந்தது. மீதமுள்ள 1,485 கிராமங்களின் உற்பத்தியும் உபரி!
மானியம் மற்றும் மேரை
நான்கில் ஒரு பங்கு விளைச்சல் சமூகத்திற்கு தேவையான பல்வேறு சேவைகளை வழங்க பயன்படுத்தப்பட்டது.
ஊர்க்காவல், கணக்குப்பதிவு, ஊர் நிர்வாகம், கல்வி, சுகாதாரம் ஆகிய பணிகளில் உள்ளூரில் இருந்தவர்களுக்கு மேரை என்ற பங்கு அளிக்கப்பட்டது.
மேலும், கிணறு, நீராதாரம், பூந்தோட்டம், தண்ணீர் பந்தல், சத்திரம், உள்ளூர் கோவில்கள் உள்ளிட்ட ஊர் கட்டமைப்புகளை நிறுவவும்,பராமரிக்கவும் மேரை தான் பயன்படுத்தப்பட்டது.
இதில் பணியாற்றியவர்களுக்கும் அதிலிருந்து தான் சம்பளம் கொடுக்கப்பட்டது. 20 கிராமங்கள் சேர்ந்து ஒரு நாடு, சில நாடுகள் சேர்ந்து ஒரு கோட்டம் என்ற நிர்வாக அமைப்பு இருந்தது. நாடு, கோட்டம் ஆகியவற்றில் இருந்த பொதுவான கட்டமைப்பு மற்றும் சேவைகளை பராமரிக்க மானியம் வழங்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, பெரிய கோவில், ஊர் விட்டு ஊர் பாயும் கால்வாய், நெடுஞ்சாலை, கோவில்களை ஒட்டி செயல்பட்ட மருத்துவமனை. மானியமும் மேற்கண்ட நான்கில் ஒரு பங்கில் இருந்து தான் வந்தது.
மெலும், சமய நிறுவனங்களில் பணியாற்றிய தேவதாசிகள், பிராமணர்கள், சமண முனிவர்கள், பக்கிரி உள்ளிட்டோருக்கும் மானியம் வழங்கப்பட்டது.
முக்கிய கோவில்களுக்கு பல்வேறு கிராமங்கள் மானியம் வழங்கின. அந்த வகையில் அதிகப்படியாக மானியம் பெற்றது காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவில். 1,250க்கும் மேற்பட்ட கிராமங்களின் உற்பத்தியிலிருந்து 0.50 சதவீதத்தை மானியமாக இந்த கோவில் மட்டும் பெற்றது!
அதே போல், திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோவில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பிற முக்கிய கோவில்கள் தலா 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மானியம் பெற்றன.
மிக சுவாரசியமாக, முஸ்லிம்களின் படையெடுப்பால், ஹிந்து சமய பெரியவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட காலம் அது.
அதனால், காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரியார், தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கும்பகோணத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார். அதற்காக, குடந்தை சிக்குடையார் கோவிலுக்கு 300 கிராமங்கள் மானியம் வழங்கின.
ஹிந்து சமயத்திற்கு மட்டுமல்லாமல் முஸ்லிம் சமய நிறுவனமான சாந்தோம் பீர்ஜாதாவுக்கும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் மானியம் வழங்கின. காரணம், அது முஸ்லிம் ஆட்சி காலம்.
இங்கு வந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள், வட மாநிலங்களில் செய்ததை போல் உள்ளூர் நிர்வாக அமைப்பை தொடவே இல்லை.
வட மாநிலங்களில் இருந்து அழைத்து வந்த சில முஸ்லிம்களை கிராமங்களில் குடியேற்றி அவர்களுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்றும், சில முஸ்லிம் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டனர்.
சமய நிறுவனங்களுக்கான மானியம் மொத்த செலவில் பெரிய பங்கை எடுத்துக்கொள்ளவில்லை என, கிராம கணக்குகளில் இருந்து தெரிகிறது. உதாரணமாக, குன்றத்துாரில் கோவில்களுக்கு ஒதுக்கப்பட்ட தானிய பங்கு 2.87 சதவீதம் தான். இதுவே கோவில் பணியாளர்களின் சம்பளத்திற்கும் செலவிடப்பட்டது. இது தவிர மிராசுதார் தன் நிலங்களில் இருந்து 10.50 சதவீதம் வரை பெரிய கோவில்களுக்கு மானியமாக கொடுத்தார்.
சுய நிதியில், கிராமங்கள், குடியிருப்போருக்கு தேவையான சேவைகளை வழங்கி, கட்டமைப்புகளை நிறுவி பராமரித்தன என்பதோடு இல்லாமல், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொது சொத்துக்களுக்காகவும் நிதி அளித்தன என்பது வியக்கத்தக்க விஷயம்.
வரி
அந்தந்த காலகட்டத்தில் இந்த பகுதியை ஆண்ட அரசர்களுக்கு வரி செலுத்தப்பட்டது. மேரை மற்றும் மானியம் போக, மீதி பங்கில், நிலத்தை விளைவித்த குத்தகைக்காரரின் பங்கு 'குடிவாரம்' என்று கழிக்கப்பட்டது. அதற்கு பின் நில உரிமையாளருக்கு 'மேல்வாரம்' என்ற பங்கு கிடைத்தது. அதில், நிலத்தின் தன்மை, பாசன வசதி, போக எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு 30ல் இருந்து 60 சதவீதம் வரை வரி வசூலிக்கப்பட்டது.
அதாவது, அரசர் விதிக்கும் வரியால் மக்களின் வாழ்வுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருந்தது.
மக்களும் தொழில்களும்
மொத்தம், 62,000 வீடுகள் இருந்தன. அவற்றில் பாதிக்கும் சற்று அதிகமான வீடுகளில் வசித்தோர் விவசாயிகளாக இருந்தனர். அவற்றில், கீழ்கண்டவாறு எண்ணிக்கையில் பல்வேறு சாதியினரின் வீடுகள் இருந்தன.
நெசவாளர், கொல்லர், தச்சர் உள்ளிட்ட கைவினை தொழில் செய்பவர்கள் மற்றும் உப்பு தயாரிப்பு, சாராயம் வடிப்பது உள்ளிட்ட பொருள் உற்பத்தி தொழில்களை செய்துவந்த 17 சாதியினர் 8,000 வீடுகளில் இருந்தனர். மொத்த வீடுகளில் இது 12.90 சதவீதம். இவர்களில் நெசவாளர்கள் மட்டும் 4,000 வீடுகளில் இருந்தனர்.
ஊர்க்காவல், நிர்வாகம், கல்வி, மருத்துவம், இதர சேவைகள், கலாசார மற்றும் ஆன்மிக சேவைகளில் ஈடுபட்டோர் 14,500 வீடுகள் அதாவது 23.39 சதவீத வீடுகளில் இருந்தனர். அவற்றில், கீழ்கண்டவாறு எண்ணிக்கையில் பல்வேறு சாதியினரின் வீடுகள் இருந்தன.
வணிகம் செய்தவர்களில், செட்டி, கவரை, கோமுட்டி உள்ளிட்டோர், 4,000 வீடுகளில், அதாவது 6.50 சதவீத வீடுகளில் வசித்தனர்.
இவர்கள் தவிர, 1.21 சதவீதம் முஸ்லிம் வீடுகளும், 1.30 சதவீதம் கிறிஸ்துவ வீடுகளும் இருந்தன.
இந்தாண்டு வெளியான மத்திய அரசின் பொருளாதார சர்வேயில் துறை ரீதியான பணி நிலவர தரவுகளை அன்றைய நிலையோடு ஒப்பிட்டு பார்க்கையில் பெரிய மாறுதல் இல்லை!
பின்தங்கி இருந்தோமா?
இன்றைய மத்திய, மாநில அரசுகளால் கூட செய்ய முடியாத திட்டங்களையும் ஒதுக்கீடுகளையும், பிரிட்டிஷார் வருவதற்கு முன், கிராம நிர்வாகங்கள் தங்கள் வருவாயில் இருந்து செய்துகொண்டன.
அன்றைய கிராமங்கள், சுயசார்புடன் சுயாட்சியோடு இருந்தன என்பதை 'உள்ளாவூர்' மற்றும் 'குன்றத்துார்' நூல்கள் தெள்ளத்தெளிவாக காட்டுகின்றன.
இப்படி, 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக சீராக செயல்பட்டு வந்த தமிழக கிராம கட்டமைப்பை, பின்வந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் கூட கலைக்கவில்லை. அதனால், கலாசார ரீதியாக பெரிய பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், ஆங்கிலேயரின் வரி கொள்ளை, 100 ஆண்டுகளுக்குள் நம் கிராமங்களை விளிம்பு நிலைக்கு தள்ளியது.
அதில், முதலில் பாதிக்கப்பட்டது, ஊர் காவல், நீர் நிலைகளை பராமரிப்பவர் என்று ஊருக்கு பொதுவான சேவைகளை வழங்கியவர்கள். அவர்களுக்கான பங்கை ஆங்கிலேயர் குறைத்தனர் அல்லது முற்றிலும் நிறுத்திவிட்டனர். வெறும் 10 ஆண்டுகளுக்கு உள்ளேயே, அவர்களின் வாழ்வாதாரம் அழிந்து, வேறு தொழில்களை தேடி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இப்படி கிராமத்தில் வாழ்க்கை தரத்தை ஆங்கிலேயர் அழித்தனர்.
அடுத்து பாதிக்கப்பட்டது, பஞ்சுருட்டி போன்ற மூலப்பொருட்களை கையாண்டு பொருள் உற்பத்தி செய்பவர்களுக்கு தயார் செய்து தரும் தொழிலில் இருந்த சாதியினர் மற்றும் நீர் நிலைகளை பராமரித்து வந்தவர்கள்.
இவர்களுக்கு வழங்கபட்ட மேரை முற்றிலுமாக நின்றுபோனதில், அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களை நம்பியிருந்த நெசவாளர் உள்ளிட்ட உற்பத்தி தொழிலில் இருந்தவர்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர். இதன் வாயிலாக உள்ளூர் தொழில்களை ஆங்கிலேயர் அழித்தனர்.
சிறிய கோவில்களுக்கான மானியத்தை முற்றிலும் நிறுத்திய ஆங்கிலேயர், பெரிய கோவில்கள் மற்றும் சமய ஸ்தாபனங்களுக்கான மானியத்தை நெல் விளைச்சலில் பங்கு என்றில்லாமல், குறிப்பிட்ட தொகை என்ற கணக்கை நிர்ணயித்தனர். நெல் விலை உயர்ந்த போதும் அந்த தொகை மாற்றப்படவே இல்லை. அதனால், மெல்ல மெல்ல, கோவில்களை நம்பி இருந்த பண்டாரம், வாத்தியம் வாசிப்பவர், பூ கட்டுபவர், நடன மங்கையர், புரோகிதர்கள் என பெரும் வட்டத்தினர் பாதிக்கப்பட்டு, தங்கள் தொழில்களை விடும் சூழல் உருவானது.
இது, 100 ஆண்டுகளுக்குள் பெரும் கலாசார அழிவை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட கொள்ளையால், ஆங்கிலேயர் ஆட்சியில் நாடெங்கும் பசி பட்டினியால் 8.50 கோடி பேர் உயிரிழந்தனர். கிராமங்களைவிட்டு வெளியேற முடியாதவர்கள் சமூகத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டனர்.
ஆங்கிலேய ஆட்சியில் வாழ்வாதார இழப்போடு, கலாசார பேரிழப்பு ஏற்பட்டது. கூடவே, தங்கள் ஆட்சியை எளிமையாக்குவதற்காக, ஒன்றோடு ஒன்று பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பிணைக்கப்பட்டு 1,000 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த சாதிகளை பிரிக்கும் வேலையை ஆங்கிலேயர் செம்மையாக செய்ததன் தாக்கத்தை இன்று வரை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
மேலும் மேலும் இப்படிப்பட்ட மீளாய்வுகள் வந்தால் தான் ஆங்கிலேயரால் போதிக்கப்பட்ட பொய்களை பற்றியும், அவற்றை உள்வாங்கி 100 ஆண்டுகளாக நமக்கு பல வடிவங்களில் நம்நாட்டவரே போதித்துவரும் கருத்துக்களை பற்றியும் நம் மக்கள் சிந்தித்துப்பார்க்க வழி பிறக்கும்.
காந்தியடிகள் கிராமங்களை அதிகார மையமாக்க வேண்டும் என்று சொன்னதில் தீர்க்கமான சிந்தனை இருந்தது என்று, இந்த மீளாய்வை படிக்கும்போது தான் புலப்படுகிறது!
இது போன்ற ஆவணங்கள்
வேறெங்கும் கிடைக்காது
தமிழகம்தான், நாட்டில் கடைசியாக முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அப்போதே ஆங்கிலேயரும் வந்துவிட்டனர். அவர்கள் செங்கல்பட்டு ஜாகிரை பெற்ற உடனேயே, அதன் முதல் கலெக்டரான லியோனஸ் பிளேஸ் மாற்றங்களை செய்வதில் மும்முரமானார்.
அவர், வழக்கமான மானியங்களை நிறுத்தியதால், நீர்நிலை பராமரிப்பு குறைந்து, விவசாயம், நெசவு உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டன. நம் அளவைகள் மாற்றப்பட்டன. இதற்கான ஆதாரங்களாக, ஓலைச்சுவடிகள் உள்ளன. இது போன்ற ஆவணங்கள், நாட்டில் வேறெங்கும் கிடைக்காது.
ஆங்கிலேயருக்கு முன்பே அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரத்தில் தமிழகம் சிறப்பாக இருந்ததை எங்கள் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அடுத்ததாக, உத்திரமேரூரை ஆய்வு செய்ய உள்ளோம்.
- - எம்.டி.ஸ்ரீநிவாஸ், நுாலாசிரியர்
அழகு மாறாத ஊர் உள்ளாவூர்
இப்போதும் உள்ளாவூர் பழைய அழகுடன் உள்ளது. நாங்கள் ஆவணங்களில் பார்த்ததும், இந்த ஊரின் தற்போதைய நிலையும் அப்படியே உள்ளது. இங்குள்ள கோவில்களும், குளங்களும் ஆக்கிரமிக்கப்படாமல் உள்ளது ஆச்சர்யம். குன்றத்துாரில், நெசவாளர்கள் அதிகம் இருந்ததையும், அங்கிருந்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், தென்னேரி உள்ளிட்ட வெளியூர் ஏரிகளுக்கும் வரி செலுத்தியதும் தெரிகிறது.
நாட்டில் தமிழகத்துக்கு அடுத்ததாக, ராஜஸ்தானில் இதுபோன்ற ஆவணங்கள் உள்ளனவா என, அங்குள்ள கலாசாரத் துறை ஆய்வு செய்யலாம். ஏனெனில், அங்கு ராஜபுத்திரர்கள் அதிக காலம் ஆட்சி செய்தனர். அங்கு, தார்பத்ரி எனும் பெரிய ஓலைகளில் எழுதும் பழக்கம் இருந்தது. அவை கிடைத்தால், 18ம் நுாற்றாண்டின் ஒட்டுமொத்த இந்தியாவை பற்றிய புரிதல் கிடைக்கும்.
- - ஜதீந்தர் கே பஜாஜ், நுாலாசிரியர்
நுால்களை வாங்க 94440 74352 சென்டர் பார் பாலிசி ஸ்டடீஸ், குன்றத்துார், சென்னை - 600 069.www.cpsindia.org
- நமது நிருபர் -