மகளிர் உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.6,000; 'சர்வே' என்ற பெயரில் 53,053 பேருக்கு பரிசு
மகளிர் உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.6,000; 'சர்வே' என்ற பெயரில் 53,053 பேருக்கு பரிசு
ADDED : டிச 31, 2025 05:11 AM

சென்னை: மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 53,053 பேருக்கு, 'சர்வே' என்ற பெயரில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக, 6,000 ரூபாயை மறைமுகமாக வழங்க முடிவெடுத்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மகளிருக்காக ஏற்கனவே பல்வேறு திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதில், இலவச பயண திட்டம், உரிமைத் தொகை திட்டம் போன்றவை தங்களுக்கு கைகொடுக்கும் என, ஆளும் கட்சி நம்புகிறது. அதேநேரத்தில், நடிகர் விஜய் துவக்கியுள்ள த.வெ.க.,விற்கு மகளிர் ஓட்டுகள் அதிகம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மகளிர் ஓட்டுகளை தக்கவைக்க, அரசு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதன்படி, தமிழக அரசு செயல்படுத்தி வரும், மக்கள் நல திட்டங்கள் குறித்து, ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
முதல்வரின் முகவரி துறை வாயிலாக, இந்த சர்வே எடுக்கப்பட உள்ளது. ஊரக வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், தமிழ் வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் இணைந்து, இப்பணியை மேற்கொள்ள உள்ளன.
இப்பணியில், ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள, 53,053 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அவர்களுடன் சேர்த்து, மொத்தமாக, சர்வே பணியில், 73,336 பேர் ஈடுபட உள்ளனர். ஜன.,1ம் தேதி முதல் 12ம் தேதி வரை, மாநிலம் முழுதும் உள்ள, 1.91 கோடி குடும்பங்களில் சர்வே மேற்கொள்ளப்பட உள்ளது.
சர்வே பணியில் ஈடுபடும் மகளிர் குழு உறுப்பினருக்கு, தினசரி ஊதியமாக 500 ரூபாய் வீதம், 12 நாட்களுக்கு 6,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
நேரடியாக பணத்தை தராமல், 'சர்வே' என்ற பெயரில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசுத் தொகையாக, 43.5 கோடி ரூபாயை, அரசு செலவிட உள்ளது. அவர்கள் வாயிலாக, தமிழக அரசுக்கு ஆதரவாக பிரசாரம் முன்னெடுக்கப்பட உள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசின் நலத்திட்டங்களால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆராய, இந்த, 'சர்வே' நடத்தப்பட உள்ளது.
இதற்கென தமிழக மின் ஆளுமை முகமை, பிரத்யேகமாக மொபைல்போன் செயலியை வடிவமைத்து உள்ளது. இந்த செயலியில், ஒவ்வொரு குடும்பத்தினரும் தெரிவிக்கும் தகவல்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
அதுமட்டுமின்றி படிவத்திலும், சில விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. இந்த பணியை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒவ்வொருவரும், ஒரு நாளைக்கு 30 குடும்பத்தினரை சந்தித்து, 'சர்வே' எடுக்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சி வழங்க, 252 தலைமை பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அரசாணையை, பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

