2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி 'ஏபிசிடி' பார்முலாவை பின்பற்ற சீமான் முடிவு
2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி 'ஏபிசிடி' பார்முலாவை பின்பற்ற சீமான் முடிவு
UPDATED : ஏப் 05, 2025 03:25 AM
ADDED : ஏப் 04, 2025 09:15 PM

தமிழகத்தில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 15 முதல் 20 சதவீதம் ஓட்டுகளை பெற, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வியூகம் அமைத்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சி, 2010ம் ஆண்டில் துவக்கப்பட்டது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, 4.58 லட்சம் ஓட்டுகளை பெற்றது. இது பதிவான ஓட்டுகளில் ஒரு சதவீதம். அடுத்து 2019 லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு, 16.46 லட்சம் ஓட்டுகளைப் பெற்றது. ஓட்டு சதவீதம் மூன்றாக அதிகரித்தது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 6.58 சதவீதம் ஓட்டுகளை பெற்று, மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், 32 லட்சம் ஓட்டுகளைப் பெற்றது. ஓட்டு சதவீதம் 8.1 ஆக உயர்ந்தது. தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை பெற்றது. ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டு சதவீதத்தை அதிகரித்ததுபோல், அடுத்த ஆண்டு நடக்க உள்ள, சட்டசபை தேர்தலில், 15 முதல் 20 சதவீதமாக உயர்த்த, சீமான் வியூகம் அமைத்த வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகிகள் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் த.வெ.க., தரப்பில், கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பா.ஜ., தரப்பிலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. எனவே, வரும் தேர்தலில், நா.த.க., தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், சீமான் திருச்சியில் பேசுகையில், ''புலி தனியாக தான் வேட்டைக்கு செல்லும். எனவே தனித்து தான் போட்டி,'' என்றார்.
தற்போது, ஏ.பி.சி.டி., எதிர்ப்பு பார்முலாவை சீமான் கையில் எடுத்துள்ளார். அதாவது 'ஏ' அ.தி.மு.க.,; 'பி' பா.ஜ.,, 'சி' காங்கிரஸ், 'டி' தி.மு.க.,வை குறிக்கும். இந்த நான்கு கட்சிகளையும் கடுமையாக எதிர்க்க, சீமான் முடிவு செய்துள்ளார். மேலும், சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்து, முதல்கட்டமாக, 100 வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்துள்ளார்.
விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,- பா.ஜ.,- த.வெ.க., போட்டியிடாத நிலையில், நா.த.க., போட்டியிட்டதன் வழியே, அரசியல் முக்கியத்துவம் பெற்றது. ஈரோடு கிழக்கில் 18 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றது. அரசியல் அதிகாரம் பெறாத சமூகத்தை சேர்ந்தவர்களை, உ.பி.,யின் கன்ஷிராம், பீஹாரின் நிதிஷ்குமார் பாணியில், தேர்தலில் களம் இறக்கி, ஓட்டு வங்கியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், பொது தொகுதிகளில், பட்டியலினத்தை சேர்ந்தவர்களை போட்டியிட வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -