தளபதி 'தலைவிதி' என்றும் டி.வி.கே.,'டீ விக்க' என்றும் கேட்குது த.வெ.க.,வினரை கலாய்க்கும் சீமான்
தளபதி 'தலைவிதி' என்றும் டி.வி.கே.,'டீ விக்க' என்றும் கேட்குது த.வெ.க.,வினரை கலாய்க்கும் சீமான்
UPDATED : ஆக 19, 2025 04:29 AM
ADDED : ஆக 19, 2025 04:26 AM

செஞ்சி: விஜய் கட்சியினரை, 'அணில்கள்' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக குறிப்பிட்டு பேசினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையை, 'தமிழ் மன்னன் கோனேரிகோன் கோட்டை' என அறிவிக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில், செஞ்சியில் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில், பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
தமிழர்களின் வரலாற்று சுவடுகளை பாடப் புத்தகங்களில் திட்டமிட்டு மறைத்தனர். வல்லபபாய் படேலையும், ஜான்சி ராணியையும் படித்தோம். வ.உ.சி., வேலுநாச்சியார் போன்ற தமிழ் தலைவர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர்.
கொள்கை என்ன செஞ்சி கோட்டையை, 'மராட்டிய மன்னர்களின் படைத்தளம், பயிற்சி களம்' என யுனெஸ்கோவை அறிவிக்க சொன்ன பிரதமர் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு எதற்கு வந்தார்?
யுனெஸ்கோ அறிவிப்பை எதிர்த்து நான் அறிக்கை விட்டதால், அங்கு வந்து நின்றார்; தமிழ் பேரரசர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு சிலை எழுப்புவேன் என்கிறார். இப்படி கொடுத்து, எதையோ பெற முயற்சிக்கிறார்.
அதே நேரத்தில், இத்தனை ஆண்டுகளாக, திராவிட ஆட்சியாளர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினரைப் பார்த்து, உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால், 'தளபதி, தளபதி' என்கின்றனர்.
அப்படி கத்தாதீங்க; எனக்கு, 'தலைவிதி, தலைவிதி'ன்னு கேட்குது. சரி, 'எதுக்கு வந்தீங்க'ன்னு கேட்டா, 'டி.வி.கே., டி.வி.கே.,'ன்னு சொல்றாங்க. அது, எனக்கு, 'டீ விக்க, டீ விக்க'ன்னு கேட்குது.
நாங்கள் புலி; நாங்கள் வேட்டையாடப் புறப்படும்போது, 'அணில்கள்' குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
'அணிலே, அணிலே ஓரமா போய் விளையாடு, குறுக்க நெடுக்க வராதே, அந்த பக்கம், பத்திரமாக மரக்கிளையில் ஏறி உட்காரு' இப்படித்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
சிவன் ஆட்டம் காட்டெருமையையோ, மானையோ வேட்டையாடினால் தான் புலிக்கு மரியாதை. பாவம், அணிலை வேட்டையாடினால் புலிக்கு என்ன பெருமை. யானை உறங்கினால், எலி வந்து விளையாடுமாம். அது மாதிரி இருக்கு. நான் மறுபடி, மறுபடி எச்சரிக்கிறேன்.
சிவன் ஆட்டத்தை சினிமாவில் பார்த்திருப்பீர்கள்; ஆனால், சீமான் ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள். அடுத்த நான்கு மாதத்தில், மொத்த ஆட்டத்தையும் என் பக்கம் திருப்புவேன்; இனி யாரையும் துாங்க விடமாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.