புதிய குற்றவியல் சட்டம் அமல்படுத்த மாநிலங்கள் ரெடி! : 5.65 லட்சம் போலீசார், அதிகாரிகளுக்கு பயிற்சி
புதிய குற்றவியல் சட்டம் அமல்படுத்த மாநிலங்கள் ரெடி! : 5.65 லட்சம் போலீசார், அதிகாரிகளுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 27, 2024 12:30 AM

புதுடில்லி: நாடு முழுதும், ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வரவுள்ள நிலையில், அவை குறித்து, 5.65 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார், சிறைத் துறை அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட, இந்திய தண்டனை சட்டம் - 1860, குற்றவியல் நடைமுறை சட்டம் - 1898, இந்திய சாட்சியச் சட்டம் - 1872 ஆகியவற்றுக்கு பதில், தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற வகையில், மூன்று புதிய மசோதாக்களை, பார்லிமென்டில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி, 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய ஆதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா' ஆகிய மூன்று மசோதாக்களை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா லோக்சபாவில் அறிமுகம் செய்தார்.
இந்த மூன்று மசோதாக்களை ஆய்வு செய்த பார்லி., நிலைக்குழு, சில திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரை செய்தது.
இதன்படி பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு, மூன்று மசோதாக்களுக்கும், கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த குளிர் கால கூட்டத்தொடரின் போது, பார்லி., ஒப்புதல் அளித்தது.
நடைமுறைக்கு வரும்
இந்த மசோதாக்களுக்கு, டிச., 25ல், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வரும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், வரும் 1 முதல், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாகவுள்ள நிலையில், அவை குறித்து, நாடு முழுதும், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட கீழ்நிலை ஊழியர்கள், 5.65 லட்சத்துக்கும் அதிகமான போலீசார், சிறைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொடர்ச்சியான ஆய்வு மற்றும் சந்தேகங்களுக்காக, 36 உதவி மையங்கள் மற்றும் கால் சென்டர்களை, தேசிய குற்றப்பதிவு பணியகம் அமைத்தது.
திறன் மேம்பாட்டிற்காக, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம், பயிற்சி மாதிரிகளை உருவாக்கி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பகிர்ந்து கொண்டது. 250க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் நடத்தின.
இவற்றில், 40,317 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 5.84 லட்சம் பேருக்கு, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் பயிற்சி அளித்துள்ளது.
இதில், 5.65 லட்சம் போலீஸ் அதிகாரிகள், சிறைத் துறை, தடயவியல், நீதித் துறை மற்றும் வழக்கறிஞர்கள் அடங்குவர். 'ஐ காட் கர்மயோகி பாரத்' மற்றும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் ஆகியவை, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, தலா மூன்று பயிற்சி வகுப்புகளை வழங்குகின்றன. இதில் இதுவரை, 2.18 லட்சம் அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
விழிப்புணர்வு
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து, நாட்டு மக்கள் அறிந்திருப்பதை உறுதி செய்யும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகிய அமைச்சகங்கள், ஆன்லைனில் பயிற்சி வகுப்புகளை நடத்தியது. இதில், 40 லட்சம் கீழ்நிலை ஊழியர்கள் பங்கேற்றனர்.
மாநில தலைநகரங்களில் நான்கு மாநாடுகளை சட்ட விவகாரங்கள் துறை ஏற்பாடு செய்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் பங்கேற்றனர்.
உயர் கல்வித் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலை மானியக் குழு, 1,200 பல்கலைகள், 40,000 கல்லுாரிகள் வாயிலாக புதிய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ், மின்னணு முறையில் குற்ற நிகழ்வுகள், நீதித் துறை விசாரணைகள் மற்றும் நீதிமன்ற சம்மன்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு வசதியாக, 'இ - சாக் ஷ்யா, நியாய் ஸ்ருதி மற்றும் இ - சம்மன்' ஆகிய செயலிகளை, தேசிய தகவல் மையம் உருவாக்கிஉள்ளது.
மேலும், மக்களிடையே பரவலான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
புதிய குற்றவியல் சட்டங்களின் நன்மைகள் குறித்து, முன்னணி அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு, பத்திரிகை தகவல் பணியகம் சார்பில் ஊடகப் பட்டறை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
புதிய சட்டங்களை அமல்படுத்த தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு அடிப்படையில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் முழுமையாக தயாராகி விட்டன.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.