வங்கக்கடலில் வினோத மாற்றங்கள்: கணிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவிப்பு!
வங்கக்கடலில் வினோத மாற்றங்கள்: கணிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவிப்பு!
ADDED : ஜூலை 09, 2024 12:20 AM

சென்னை: காலநிலை மாற்றத்தால், காற்றின் திசை மாறுபட்டு, தென்மேற்கு பருவமழைக் காலத்திலும், வங்கக்கடலில் அடிக்கடி சூறாவளிக் காற்று வீசுவதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை ஜூனில் துவங்கி தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக, தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில், அவ்வப்போது மிதமான மழை பெய்கிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 'இன்னும் மூன்று நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்.
அடிக்கடி சூறாவளி
'இந்த நாட்களில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் பெரும்பாலான இடங்களில், சூறாவளிக் காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுஉள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழைக் காலத்தில், இயல்பாக அரபிக்கடல் பகுதியில்தான், சூறாவளிக் காற்று அதிகமாக வீசும். வங்கக்கடலில் அவ்வளவாக இருக்காது. இந்த முறை, வங்கக் கடலிலும் அடிக்கடி சூறாவளிக் காற்று வீசுகிறது.
கடலியல் மற்றும் வானிலை குறித்த ஆராய்ச்சியாளரும், அண்ணா பல்கலையின் காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவு மேலாண்மை துறையின் பேராசிரியருமான ஆ.ராமச்சந்திரன் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழைக் காலத்தில், வங்கக்கடலில் சூறாவளிக் காற்று தொடரக்கூடாது. ஆனால், இந்த ஆண்டு வானிலை ஆய்வாளர்கள் மற்றும் வானிலை துறை அதிகாரிகளை குழப்பும் வகையில், காற்றின் திசை அடிக்கடி மாறுகிறது. அதனால், வங்கக்கடலில் அடிக்கடி சூறாவளிக் காற்று வீசுகிறது. இது, காலநிலை மாற்றத்தின் விளைவாகும்.
நீளும் ஆராய்ச்சிகள்
இந்தியா, இலங்கை, ஆப்ரிக்கா போன்ற நாடுகள், பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளன. பூமியின் கடல் பகுதியானது, பூமத்திய ரேகைக்கு கீழேதான் உள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு கலப்பு அதிகமாகி விட்டது. அதனால், பூமியில் வெப்ப அளவும், அதன் மேல் இயல்பான வானிலையும் மாறியுள்ளது.
இதன் காரணமாக, காற்றின் வீச்சு அடிக்கடி மாறி, பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில், இயல்பு நிலைக்கு மாறாக சூறாவளி வீசுகிறது. எதிர்காலத்தில் வங்கக் கடலை நம்பி, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு, அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதை பல்வேறு தரப்பினரும் ஆய்வு செய்கின்றனர். ஆனால், 'இதுதான் பிரச்னை; இதுதான் தீர்வு' என முடிவு செய்யாமல், ஆராய்ச்சிகள் நீள்கின்றன. எனவே, காலநிலை மாற்றத்துக்கான வளிமண்டல மற்றும் கடலியல் மாற்றத்தை சமாளிக்க, எந்நேரத்திலும் நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.