யு டியூப் பார்த்து சுயமருத்துவம் செய்த மாணவி இறப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை
யு டியூப் பார்த்து சுயமருத்துவம் செய்த மாணவி இறப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை
ADDED : ஜன 21, 2026 07:20 AM

மதுரை: மதுரையில் உடல் பருமனை குறைக்க யுடியூப்பை பார்த்து சுயமருத்துவம் செய்த கல்லுாரி மாணவி உடல்நலம் பாதித்து இறந்தார். முறையான வழிகாட்டுதலின்றி சுயமருத்துவம் செய்யக்கூடாது என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
மதுரை செல்லுார் மீனாம்பாள்புரம் வேல்முருகன். இவரது மகள் கலையரசி 19, தனியார் கல்லுாரி முதலாமாண்டு -மாணவி. உடல் பருமனால் வருத்தப்பட்ட கலையரசி, உடல் கொழுப்பை குறைப்பது எப்படி என யு டியூப்பில் பார்த்தார். அதில் வெங்காரம் எனும் நாட்டு மருந்தை உட்கொண்டால் குறையும் என நம்பியவர், அதை பயன்படுத்தி உடல்நலம் பாதித்து இறந்தார்.
என்னைய காப்பாத்துப்பா...
தந்தை வேல்முருகன் கூறியதாவது: எனது மகள் உடல் பருமனாக இருப்பதாக கவலையில் சொல்லிக் கொண்டே இருந்தார். யு டியூப் பார்த்து வெங்காரம் வாங்கி சாப்பிடும் போது, 'மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம்' எனக் கூறினேன்.
ஆனாலும் உடலை குறைக்க சாப்பிட்டார். சிறிது நேரத்திலேயே வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதித்தோம். மாலையில் வயிறு வலி ஏற்பட்டு வாந்தி எடுத்ததால் மருத்துவமனையில் காண்பித்து வீட்டுக்கு வந்தோம்.
இரவு உளறி பேச தொடங்கினார். அழுதபடி 'வயிறு வலிக்குதுபா, ரத்தமா வருதுபா, என்னை கட்டிபிடிப்பா, என்னைய விட்ராதப்பா, காப்பாத்துப்பா' என கதறி அழுதபோது வாந்தி மீண்டும் வந்தது. அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்' என்றார்.
டாக்டர் சொல்வது என்ன?
சிவகங்கை டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது: யு டியூப்பில் வெங்காரம் (BORATE) சமைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் வாரம் 2 கிலோ எடை குறையும் என வீடியோ உள்ளது. பொதுவாக சித்த மருத்துவத்தில் வெங்காரத்தை சிறுநீர் பாதை தொற்று, இரைப்பை புண், தோல் நோய் சிகிச்சைக்கு சித்த மருத்துவர்கள் உபயோகிக்கின்றனர். சித்த மருத்துவம் முறையாக பயின்று பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு தெரியும். வெங்காரத்தை அப்படியே மருந்தாக உபயோகிக்க முடியாது.
இறப்புக்கான காரணம் அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சே. மாணவி வெங்காரத்தை சாப்பிட்டதால் நஞ்சுத்தன்மை உண்டாகி கடும் வயிற்றுப் போக்கு, குடல் இரைப்பை புண், அதனால் ஏற்பட்ட ரத்தப் போக்கு, சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றால் இறந்திருக்க வேண்டும். உடல் எடை குறைப்புக்கு மாவுச்சத்தை குறைக்க வேண்டும்.
தினசரி கலோரி அளவுகளை குறைக்க வேண்டும். இனிப்பு சுவை கொண்டவற்றை நிறுத்த வேண்டும். புரதம், ஆரோக்கிய கொழுப்பை சேர்க்க வேண்டும். நடை பயிற்சி, நல்ல உறக்கம் அவசியம். இவற்றால் உடல் எடை குறையும். ஆனால் இதையும் வல்லுனர் கண்காணிப்பில் செய்வது நல்லது.
யு டியூப்பில் வீடியோ அப்லோடு செய்பவர்கள், மருத்துவம் சார்ந்த தகவல்கள் குறிப்பாக ஆபத்தான மருந்துகள் குறித்து தகவல் அளிக்கும் போது அதை பொதுமக்கள் எளிதில் எந்த மருத்துவ அறிவுரையும் இல்லாமல் உட்கொள்ளுமாறு பரிந்துரை செய்யக் கூடாது. இவ்வாறு கூறினார்.

