தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை: கருத்தடை, தடுப்பூசி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை: கருத்தடை, தடுப்பூசி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
UPDATED : ஆக 23, 2025 11:49 AM
ADDED : ஆக 23, 2025 12:41 AM

தெரு நாய்கள் விவகாரத்தில் நாய் ஆர்வலர்கள் நிம்மதியடையும் வகையில், உச்ச நீதிமன்றம் தன் முந்தைய உத்தரவை திருத்தியுள்ளது.
அதன்படி, 'பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்திய பின், அதே பகுதியில் விட்டுவிட வேண்டும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம், பொது இடங்களில் நாய்களுக்கு உணவு அளிக்க தடை விதித்துள்ளது.
நாடு முழுதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், முதியோர், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நாய்க்கடி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகளும் தொடர்கின்றன.
அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து கடந்த மாதம் 28ல் விசாரித்தது.
தொடர்ந்து கடந்த 11ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வு, டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திரியும் தெரு நாய்களை எட்டு வாரத்திற்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது.
மேலும், தெரு நாய்களை பிடிக்கும்போது அதற்கு இடையூறாக இருப்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து இந்த உத்தரவில் மாற்றங்களை செய்யக் கோரியும், மாநகராட்சி ஊழியர்கள் தெரு நாய்களை பிடிக்க தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதி அமர்வு முன், இந்த மனுக்கள் கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'நாடு முழுதும் நாள்தோறும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகின்றனர். ஆண்டுக்கு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். குழந்தைகள், முதியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்' என, புள்ளிவிபரங்களுடன் வாதிட்டார்.
நாய் ஆர்வலர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், 'தெருநாய்களை ஒன்றாக காப்பகங்களில் அடைப்பது அவற்றை கொலை செய்வதற்கு ஈடானது. ஏனெனில் அவை ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு இறந்து போகும். எனவே, தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது, வெறி ஏற்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்துவது போன்ற மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். ஈவு, இரக்கமின்றி தெருநாய்கள் விவகாரத்தை அணுகக்கூடாது' என, கேட்டுக் கொண்டார்.
இருதரப்பு வாதங்களையும் குறித்துக் கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆக., 11ம் தேதி வழங்கிய உத்தரவில் சில மாற்றங்களை பிறப்பித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அதன் விபரம்:
டில்லியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க தடை விதிக்க முடியாது. மாநகராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடிக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
எங்கே பிடிக்கப்படுகிறதோ, மீண்டும் அங்கேயே நாய்களை விட்டு வர வேண்டும். அதே சமயம் இந்த உத்தரவு ரேபிஸ் நோயால் பாதித்த வெறிநாய்கள் மற்றும் மூர்க்கத்தனமான நாய்களுக்கு பொருந்தாது. அவற்றை பிடித்து வந்து காப்பகத்தில் பராமரிக்க வேண்டும். அதே போல் தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் நாய் ஆர்வலர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
--நமது டில்லி நிருபர் -