வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கு 11 ஆவணங்கள் என்பது ஏற்புடையதே: எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கு 11 ஆவணங்கள் என்பது ஏற்புடையதே: எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
UPDATED : ஆக 14, 2025 01:25 AM
ADDED : ஆக 14, 2025 01:20 AM

'வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, ஏழு ஆவணங்களுக்கு பதிலாக, 11 ஆவணங்களை காட்டலாம் என்ற தேர்தல் கமிஷனின் பரிந்துரை ஏற்புடையதாகவே இருக்கிறது' என, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. மேலும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப் பட்டது.
பிரச்னை இந்த மனுக்களை ஒன்றாக இணைத்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி அமர்வு முன் நேற்று முன் தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'தேர்தல் கமிஷன் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே நம்பகத்தன்மை இல்லாததே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக பிரச்னை உருவாக காரணம்' என தெரிவித்தது.
மேலும், ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை நம்பகமான ஆவணமாக ஏற்க முடியாது. இந்தியர் என்பதை நிரூபிக்க நிச்சயம் உறுதியான ஆவணம் தேவை என குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, கபில் உள்ளிட்டோர், 'தேர்தல் நெருங்கும் நேரத்தில், வாக்காளர் திருத்த பணியை அவசரகோலத்தில் மேற்கொள்ள என்ன காரணம்?' என கேள்வி எழுப்பினர். அவர்கள் முன்வைத்த வாதம்:
தேர்தல் முடிந்த பிறகோ, அல்லது ஓராண்டுக்கு முன்பாகவோ பொதுமக்களுக்கு உரிய கால அவகாசம் கொடுத்து வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம். கடைசி நேரத்தில் விடாப்பிடியாக நடத்தப்படுவது தான் சந்தேகத்தை எழுப்புகிறது.
தேர்தல் கமிஷனால் ஏற்கப்படும் ஆவணங்களில் ஒன்றான பாஸ்போர்ட், பெரும்பாலானவர்களிடம் இல்லை.
பீஹாரில் உள்ள 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில் வெறும் 36 லட்சம் பேரிடம் மட்டுமே பாஸ்போர்ட் இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, பாஸ்போர்ட் இல்லாதவர்கள் என்ன செய்வர்?
ஆதார், ரேஷன் கார்டு, மின்கட்டண ரசீது, காஸ் ரசீது ஆகியவற்றை நம்பகமான ஆவணமாக ஏற்க தேர்தல் கமிஷன் மறுக்கிறது. வசிப்பிட சான்று பெறுவதிலும் பீஹார் மாநிலத்தில் நிறைய குளறுபடிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.
விதிமுறை மீறல் பிறப்புச் சான்றிதழும் பெரும்பாலானோரிடம் இல்லை. அப்படி வைத்திருந்தவர்களும், இயற்கை பேரிடர்களில் அந்த சான்றிதழ்களை தொலைத்துவிட்டனர். இத்தனை பிரச்னைகள் இருக்கும் சூழலில், இந்த விவகாரத்தை தேர்தல் கமிஷன் அவசர கோலத்தில் அணுகுவது சரியல்ல.
தவிர எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு ஆறு மாதம் முன் எந்த வாக்காளர்களையும் நீக்கக்கூடாது என்ற விதிமுறையை தேர்தல் கமிஷன் மீறி விட்டது.
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண், ''தேர்தல் கமிஷன் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், ஒரே முகவரியில் 240 பேர் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது,'' என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், 'அப்படி நடக்க சாத்தியமே இல்லை' என தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
பொதுவாக இப்படியான ஆவண சரிபார்ப்பு பணி மேற்கொள்ளும்போது பெரும்பாலான மக்களிடம் என்னென்ன ஆவணங்கள் இருக்கின்றன? எதை கேட்கலாம்? என்பது குறித்து பல்வேறு அரசு துறைகளிடம் இருந்து பின்னுாட்டங்களை பெறுவர்.
அதன் பிறகே ஆவணங்களுக்கான பட்டியல் தயாராகும். அந்த வகையில், 36 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது என்பது பெரும்பான்மையானது தான்.
ஆவண சரிபார்ப்பு மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர பணிக்காக தேர்தல் கமிஷன் 11 ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என கூறியிருக்கிறது.
இதற்கு முன், அந்த ஆவணங்களின் எண்ணிக்கை வெறும் ஏழாக மட்டுமே இருந்திருக்கிறது. தற்போது கூடுதலாக ஐந்து ஆவணங்கள் சேர்க்கப்பட்டிருப்பது ஏற்புடையதாகவே தெரிகிறது.
ஆதார் அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ளாததால், நிறைய வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக மனுதாரர்கள் முன்வைக்கும் வாதங்களை புரிந்து கொள்ள முடிகிறது.
அதேநேரம், தேர்தல் கமிஷன் கேட்கும் பிற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாமே. அப்படி சமர்ப்பிக்கும்பட்சத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவது பெருமளவில் குறைந்து விடுமே .
இவ்வாறு நீதிபதிகள் கருத்து கூறினர்.
-டில்லி சிறப்பு நிருபர் -