கூட்டணி குழப்பத்தில் கட்சி தலைமை; பிளவை எதிர்நோக்கும் தமிழக காங்.,
கூட்டணி குழப்பத்தில் கட்சி தலைமை; பிளவை எதிர்நோக்கும் தமிழக காங்.,
UPDATED : பிப் 14, 2026 10:24 AM
ADDED : பிப் 14, 2026 04:14 AM

- நமது நிருபர் -
தி.மு.க., அல்லது த.வெ.க., என, எந்த கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தாலும், அக்கட்சி பிளவுபட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியை கோஷ்டி தலைவர்கள் சிலரும், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும் தான் விரும்புகின்றனர் என, விஜய் ஆதரவு காங்கிரசார் தெரிவிக்கின்றனர்.
'தொண்டர்கள் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும்' என்ற அடிப்படையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கு காய்களை நகர்த்தி வருகிறார்.
இதனால், காங்கிரசில் மொத்தமுள்ள 17 எம்.எல்.ஏ.,க்களில், 12 எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க., கூட்டணியை விரும்பும் ஆதரவாளராக மாற்றப்பட்டு உள்ளனர். தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறினால், அக்கட்சி மூத்த தலைவர் ஒருவர் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள், சில மாவட்டத் தலைவர்கள், காங்கிரசை உடைத்து, புதிய கட்சி துவக்க தயாராக உள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமானால், 'ஜனநாயக பொங்கல் விழா'வை நடத்திய விஜய் ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள் இணைந்து, ஜனநாயக காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்க தயாராக உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

