கட்சியில் 'பெரிசு'களுக்கு டாட்டா: தி.மு.க., தலைமை திட்டவட்டம்?
கட்சியில் 'பெரிசு'களுக்கு டாட்டா: தி.மு.க., தலைமை திட்டவட்டம்?
ADDED : மார் 03, 2025 05:21 AM

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை, தி.மு.க., முழு வேகத்தில் துவக்கி விட்டது. ஆட்சி பணியுடன், தேர்தலுக்கான பணிகளையும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அவரின் மகனும், கட்சியின் இளைஞர் அணி செயலருமான உதயநிதியும் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், வியூக வகுப்பு குழுவினர் கொடுத்த ஆலோசனைப்படி, கட்சியில் சீனியர்களாக இருக்கும் பலருக்கு, வரும் சட்டசபை தேர்தலில், 'சீட்' கிடைக்க வாய்ப்பில்லை என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2006 சட்டசபை தேர்தலில், பெரும்பான்மைக்கு குறைவான இடங்களையே தி.மு.க., பிடித்தது. அதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தினார், அப்போதைய முதல்வரான கருணாநிதி. அதன்பின், 2011 மற்றும் 2016 தேர்தல்களில் தி.மு.க., தோல்வியையே சந்தித்தது. இந்த இரு தேர்தல்களிலும் கட்சி தோற்றதற்கான காரணங்களை தி.மு.க., மேலிடம் ஆராய்ந்தது.
அப்போது, 'கட்சியிலும், ஆட்சியிலும், ஜெயலலிதா போல அவ்வப்போது மாற்றங்களை செய்திருக்க வேண்டும். 'குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஆட்சியிலும், கட்சியிலும் பொறுப்பு கிடைத்ததால், அவர்களும், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தோரும் மட்டுமே வளமடைந்தனர். கட்சிக்காக உழைத்த பலருக்கும் வாய்ப்பு கிடைக்காமல் சோர்ந்ததன் விளைவே தி.மு.க.,வுக்கு தோல்வி' என்று, பலர் கருத்து கூறினர்.
இந்நிலையில், 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வின் வெற்றிக்கான வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிேஷார் நியமிக்கப்பட்டார். அவர் வகுத்து கொடுத்த வியூகங்களை களத்தில் செயல்படுத்தும் போது, தமிழகத்தின் பல இடங்களில் கிஷோர் குழுவை சேர்ந்தவர்களோடு, கட்சியின் மூத்த தலைவர்கள் மறைமுகமாக மோதலை தொடர்ந்தனர். அத்துடன் கட்சித் தலைமையிடம் புகார் பட்டியலும் வாசித்தனர். அதனால், கட்சியின் மூத்தவர்களை சமாதானப்படுத்த, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட்ட சீட் வழங்கியது தி.மு.க., தலைமை.
இதில், பெரும்பாலானோர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக, அவர்களுக்கே மீண்டும் அமைச்சராக வாய்ப்பு அளிக்கப்பட்டது. 'இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; அப்போது தான் ஆட்சியில் மலர்ச்சி ஏற்படும்' என, பிரசாந்த் கிஷோர் குழுவினர் கொடுத்த யோசனையை தி.மு.க., தலைமை ஏற்கவில்லை. காரணம், மூத்த தலைவர்கள் ஸ்டாலினுக்கு கொடுத்த நெருக்கடி தான். ஆனால், வரும் சட்டசபை தேர்தலில், புதுவித வியூகங்களை கடைப்பிடிக்கும்படி, தி.மு.க., மேலிடத்திற்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது.
அதாவது, பார்த்த முகங்களுக்கே ஓட்டளித்து மக்கள் சலிப்படைந்து விட்டதால், இம்முறை, தி.மு.க., சார்பில் போட்டியிட புதியவர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; அது, கட்சிக்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் தேர்தலில் நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க, கட்சித் தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலுக்காக, வியூக வகுப்பு குழுவினர் கொடுத்துள்ள யோசனையை முழுமையாக நிறைவேற்ற, கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது. அந்த வகையிலேயே, த.வெ.க.,வை அ.தி.மு.க., பக்கம் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும், தி.மு.க., தரப்பில் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் நினைப்பது போல நடந்து விட்டால், வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி சார்பில், தி.மு.க., மட்டும், 200 தொகுதிகளில் போட்டியிடும். கட்சியில் மூத்தவர்களாக இருப்போர் பலருக்கு சீட் மறுக்கப்படும்.
குறிப்பாக, தற்போது அமைச்சர்களாக இருக்கும் துரைமுருகன், பொன்முடி, பன்னீர்செல்வம், நேரு, பெரியசாமி, கீதா ஜீவன், பெரியகருப்பன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது. இதை சூசகமாக, சம்பந்தப்பட்டவர்களிடமே கட்சி தலைமை சொல்லத் துவங்கி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -