15வது நிதிக்குழு மானியம் பெற நகராட்சிகளில் வரி வசூல் தீவிரம்
15வது நிதிக்குழு மானியம் பெற நகராட்சிகளில் வரி வசூல் தீவிரம்
ADDED : பிப் 17, 2025 12:46 AM

தமிழகத்தில், 138 நகராட்சிகள், 25 மாநகராட்சிகள் உள்ளன. இங்கு, சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த வருவாயை கொண்டு தான், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள், ஊழியர் சம்பளம் மற்றும் மின் கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் செய்யப்படுகின்றன.
ஆண்டுதோறும், 100 சதவீதம் வரி வசூல் என்ற இலக்கை எட்டினால், 15வது நிதிக்குழு மானியம் நகராட்சிக்கு வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக நகராட்சிகளில், வரி வசூல் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின், 15வது நிதிக்குழு மானியத்தில், 10 கோடி ரூபாய் வரை நகராட்சிகளுக்கு வழங்கப்படும்.
இந்த மானியத்தில், 'டைடு கிராண்ட்' நிதியில், சுகாதாரம் மற்றும் குடிநீர் பணிகள் மேற்கொள்ளலாம். 'அன்டைடு கிராண்ட்' நிதியில், ரோடு, சம்பளம், இதர பணிகளை மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு ஆண்டும் கடந்தாண்டை விட அதிகளவு வசூல் செய்ய வேண்டும்.
வரி வசூல் இலக்கை எட்டாவிட்டால், மானியத்தில் நிதி கிடைக்காது. நிதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நகராட்சி பொது நிதியில் செய்ய வேண்டும். நகரின் வளர்சிக்கான பணிகளை முழு அளவில் மேற்கொள்ள முடியாது.
கடந்த, 2024 - 25ம் நிதியாண்டுக்கான மானியங்களை பெற, கடந்தாண்டை விட, 10.15 சதவீதம் அதிகமாக சொத்து வரி வசூல் செய்யாததால், இரு மாநகராட்சிகள், 17 நகராட்சிகளுக்கு, 15வது மத்திய நிதிக்குழு மானியம், 'டைடு கிராண்ட்' மற்றும் 'அன்டைடு கிராண்ட்' நிதி பெறப்படவில்லை.
முழுமையான வரி வசூல் செய்து, நிதிக்குழு மானிய நிதியை பெற வேண்டும் என, வரி வசூலில் முனைப்பு காட்டப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.
-நமது நிருபர்-