அரசு பள்ளிகளை பாதிக்கும் 'வெற்றிப் பள்ளிகள்' திட்டம்; கவலையில் ஆசிரியர்கள்
அரசு பள்ளிகளை பாதிக்கும் 'வெற்றிப் பள்ளிகள்' திட்டம்; கவலையில் ஆசிரியர்கள்
ADDED : டிச 30, 2025 04:34 AM

மதுரை: தமிழக அரசின் 'வெற்றிப் பள்ளி' திட்டம் அரசு பள்ளிகளை பாதித்து, மாணவரிடையே கல்வி ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களை ஜெ.இ.இ., நீட் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கு தயார்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு தலா ஒரு மாதிரிப் பள்ளி திட்டம் நடைமுறையில் உள்ளது. மாவட்டத்தில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து உண்டு உறைவிடப் பள்ளியாக இந்த மாதிரிப் பள்ளிகள் செயல்படுகின்றன. இதற்கு அரசு ரூ.பல கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், ஒன்றியம் வாரியாக 'வெற்றிப் பள்ளிகள்' திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்து 236 ஒன்றியங்களில் தலா ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியை 'வெற்றிப் பள்ளி' என தரம் உயர்த்தி, அனைத்து நவீன கட்டமைப்புகளையும் மேற்கொண்டு, உண்டு உறைவிடப் பள்ளியாக செயல்படுத்தப்படவுள்ளது.
இப்பள்ளிகள் எண்ணிக்கையை அடுத்தடுத்து அதிகரிக்க உள்ளன. அவ்வாறு அதிகரித்தால் ஏற்கனவே உள்ள மேல்நிலைப் பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசு நிதியை பெறுவதற்காக பி.எம்., ஸ்ரீ பள்ளி திட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்காமல், வெற்றி பள்ளி திட்டம் மூலம் மத்திய அரசை 'குளிர்விக்கும்' வகையில் மறைமுகமாக தமிழக அரசு ஆதரிக்கிறதா என கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது: இத்திட்டம், மத்திய அரசின் பி.எம்.,ஸ்ரீ பள்ளி திட்டத்தை போல் உள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், 'வட்டார அளவில் அனைத்து வசதிகளும் கொண்ட பள்ளி ஏற்படுத்தப்படும். குறைவான மாணவர் உள்ள பள்ளிகளை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளிகளுடன் அப்பள்ளி இணைக்கப்படும். பள்ளிக்கு மாணவர்கள் செல்ல பஸ் வசதி மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் 14,500 பள்ளிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டள்ளது.
புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை எனக் கூறி வரும் நிலையில், அந்த திட்டத்தை போல் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தை துவக்கியுள்ளது.
இதன்படி ஒன்றிய அளவில் வெற்றிப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் அந்த பள்ளிகளில் தான் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். தற்போதுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து, கல்வி பாதிக்கும். இப்பள்ளிகளில் பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் காலப்போக்கில் தனியாருக்கு இந்த பள்ளிகளை தாரைவார்க்கும் வாய்ப்பும் உள்ளது. மாதிரி, வெற்றி பள்ளி திட்டங்கள் மாணவர்களிடையே கல்வியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எந்த வகையிலும் அரசு பள்ளிகள், ஏழை மாணவர் கல்வி பாதிக்காத வகையில் தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.

