தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ த.வெ.க., ஆட்சி கலையுமென கனவு காணுகிறது தி.மு.க.,: முதல்வர் விஜய்

 த.வெ.க., ஆட்சி கலையுமென கனவு காணுகிறது தி.மு.க.,: முதல்வர் விஜய்

 த.வெ.க., ஆட்சி கலையுமென கனவு காணுகிறது தி.மு.க.,: முதல்வர் விஜய்

29


ADDED : செப் 26, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 06:30 AM

29


29
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

'இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றால், ஜனவரி மாதம் த.வெ.க., ஆட்சி கலைந்து விடும்' என தி.மு.க., கனவு காண்கிறது என முதல்வர் விஜய் மதுராந்தகம் பிரசார கூட்டத்தில் பேசினார்.

மதுராந்தகம் பிரசார கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதாவது: இந்த இடைத்தேர்தலில் மக்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும், தமிழக பெண்களை அவதுாறாகவும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசுபவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனையாக இருக்க வேண்டும். மீறி ஆபாச சக்திக்கும், மற்ற பலருக்கும் ஓட்டு போட்டால், பெண்களை தவறாக பேசுபவர்களை ஆதரிப்பதாக அமைந்து விடும்.

சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வென்ற கட்சி தான் ஆட்சி அமைக்க வேண்டும். ஆனால், தி.மு.க.,வுடன் இணைந்து, இங்கு அ.தி.மு.க.,வினர் ஒரு கூத்து செய்தனர். முன்னர் பா.ஜ.,வின் கிளையாக அ.தி.மு.க., இருந்தது; இப்போது, தி.மு.க.,வின் கிளை கழகமாக மாறி விட்டது. இதை நான் சொல்லவில்லை; பெரிய தலைவர்கள் சொல்கின்றனர். விஜய் ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்ய முடியாது; மக்கள் காசை தொட முடியாது; தொட்டால் மாட்டிக் கொள்வர் என்று தெரியும். அதனால், இப்படி செய்தனர்.

நாங்கள், மக்கள் காசை தொட மாட்டோம்; தொட்டவர்களையும் விட மாட்டோம். அந்த காலத்தில் இருந்தே, ஊழலின் ஊற்றுக்கண்ணாக தி.மு.க.,வினர் இருந்துள்ளனர். அந்த காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து, சர்க்காரியா கமிஷன் கூறிய குற்றச்சாட்டுகளை, இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினால், ஊழல் நடந்த போது விஜய் பிறக்கவில்லை என எதிர்க்கட்சிகள் சொல்கின்றன.

நான் எப்போது பிறந்தால் இவர்களுக்கு என்ன; இவர்களின் ஊழல் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், வண்டவாளம், தண்டவாளம் ஏறுகின்றன. நான் சட்டசபையில் ஊழல் என்று பேசினால், தி.மு.க.,வினர் ஆதாரம் காட்டு என்பர். ஆதாரம் காட்டினால், 'கோர்ட்டில் வழக்கு இருக்கிறது; அதை பற்றி இங்கே பேசக்கூடாது' என்கின்றனர். அதனால், அவர்கள் சொல்வதை காதில் போட்டுக்கொள்ளாமல் பேசினேன். நான் சட்டசபைக்கு புதியவன் என்பதால், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது பேசுவதா, வேண்டாமா என குழப்பத்தில் நின்றேன். மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கு, குரலை உயர்த்தி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் முதல்வரானதும், பல இடங்களுக்கு ஆய்வுக்கு செல்கிறேன். நாங்கள் கட்டிய பாலத்தில் நின்று, விஜய் ஷூட்டிங் எடுக்கிறார் என்கின்றனர். நீங்கள், உங்கள் சொந்த காசில் பாலத்தைக் கட்டினீர்களா; அதற்கான காசோலை எங்கிருந்து வந்தது; கோபாலபுரத்தில் இருந்து வந்ததா அல்லது சித்தரஞ்சன் சாலையில் இருந்து வந்ததா?

உங்களிடம், 10 ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது; சொந்தமாக கார் கூட இல்லையே. தேர்தலில் போட்டியிட்ட போது கொடுத்த கணக்கு சொல்கிறதே. செலவுக்கு பணம் இல்லாத பரம ஏழையாக இருக்கும் நீங்கள், கணக்கில் வராத அந்த பணத்தை வைத்து, பாலத்தைக் கட்டினீர்களா என, மக்கள் கேட்கின்றனர்.

முதல்வர் பதவி என்பது, மக்களின் வேலைக்காரன் என்பது தான். தி.மு.க., குடும்பத்தினர், முதலாளி மாதிரி பேசுகின்றனர். சட்டசபை தேர்தலுக்கு முன், நீங்கள் போட்ட கணக்கு பொய்த்து விட்டது. இப்போது, குறுக்கு வழியில் ஆட்சியை கலைக்கலாம் என மனக்கணக்கு போடுகின்றனர். அரசியலை தாண்டிய பாசக்கணக்கு எனக்கும், மக்களுக்கும் இருக்கிறது. பச்சை குழந்தை முதல் பாட்டி, தாத்தா வரை என் சொந்தங்கள் உள்ளன. இவ்வாறு விஜய் பேசினார்.

'கொள்ளை அடிக்க கடன் வாங்கவில்லை'


முதல்வர் விஜய் பேசியதாவது: விஜயும் கடன் வாங்குகிறார் என்கின்றனர். கொள்ளை அடிப்பதற்கு, நான் கடன் வாங்கவில்லை; மக்களுக்கு நல்லது செய்வதற்காக, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக கடன் வாங்குகிறேன். ஆறு சிலிண்டர் கொடுப்பதாக கூறிவிட்டு, இப்போது மூன்று மட்டுமே தருவதாக சொல்கின்றனர். அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
எதிர்க்கட்சிகள் முகத்தில் மக்கள் கரியை பூசி அனுப்பி விட்டனர். மகளிர் இலவச பயணம் திட்டம் குறித்து பேசியவர்களை, விசில் அடித்து மக்கள் விரட்டி அனுப்பி விட்டனர். சென்னை பாதிக்கப்படக் கூடாது; நீர்நிலைகள் பாதிக்கக்கூடாது; விவசாயிகள் மத்தியில் நிற்க வேண்டும் என்பதால், பரந்துார் விமான நிலைய விஷயத்தில் நடவடிக்கை எடுத்தோம். பால் கொள்முதல் விலையை உயர்த்தி, மூன்று மாதத்தில் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளோம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் தீயசக்தி என்று கூறப்பட்ட தி.மு.க.,வுடன், அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதை, எம்.ஜி.ஆர்., தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பா.ஜ., உள்ளே வந்து விடும் என பூச்சாண்டி காட்டினர். இப்போது, பா.ஜ., மூச்சு விட திணறிக் கொண்டு இருக்கிறது.
தி.மு.க.,வும், பா.ஜ.,வும் வேறு வேறு அல்ல; இரண்டு கட்சிகளும் ஒன்று தான். மத்திய அரசின் லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க, தி.மு.க.,வினர் காத்துக்கொண்டு உள்ளனர்.
'இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றால், ஜனவரி மாதம் த.வெ.க., ஆட்சி கலைந்து விடும்' என, தி.மு.க.,வில் உள்ள பெரியவர் ஒருவர் சொல்கிறார். மக்கள் அமைத்துக் கொடுத்த ஆட்சி கலையும் என்று சொன்னால், அவர்களின் கனவு தான் கலையும்.
இந்த விஜயை தொடாதீர்கள்; தொட்டால், ஏன்டா இந்த விஜயையும், மக்களையும் தொட்டோம் என காலத்திற்கும் புலம்புவீர்கள். தி.மு.க., - பா.ஜ., - அ.தி.மு.க.,வை ஓரங்கட்ட, விசில் சின்னத்திற்கு மக்கள் ஓட்டு போட வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us