'தி பெங்கால் பைல்ஸ்' பற்ற வைத்த நெருப்பு; மே.வங்க தேர்தலில் பா.ஜ.,வுக்கு பலன் தருமா?
'தி பெங்கால் பைல்ஸ்' பற்ற வைத்த நெருப்பு; மே.வங்க தேர்தலில் பா.ஜ.,வுக்கு பலன் தருமா?
ADDED : ஆக 19, 2025 01:17 AM

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் நடந்த அசம்பாவிதங்கள், இன்றளவும் அங்குள்ள ஹிந்துக்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன. அதை, பிரமாண்ட திரையில் ஈரம் காயாமல் திரைப்படமாக எடுத்தால் என்ன ஆகும்?
மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்., அரசின் ஒட்டுமொத்த தேர்தல் வியூகமும் ஒரே நொடியில் மாறிப் போகும் என அஞ்சப்படுகிறது. அந்த அளவுக்கு, தி பெங்கால் பைல்ஸ் திரைப்படத்தில் ரத்தமும், சதையுமாக பல காட்சிகள் அழுத்தமாக படமாக்கப்பட்டு இருப் பதாக கூறப்படுகிறது.
பாதிப்பு
குறிப்பாக நாடு சுதந்திரம் அடைந்த மறுநாள், கொல்கட்டாவில் நடந்த கலவரத்தில், ஹிந்துக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அக்டோபரில் நடந்த நவகாளி கலவரத்தில் ஹிந்துக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்ற விபரங்களை கண் முன்னே இந்த திரைப்படம் விவரிக்கிறது.
தேசப் பிரிவினைக்குப் பின் மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களே அதிகமாக பாதிக்கப்பட்டதாக இந்த திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் சூழலில், இத்திரைப்படத்தை வெளியிட்டால் நிச்சயம் ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அக்கட்சி தலைவர்கள் கருதுகின்றனர்.
திரிணமுல் காங்கிரசின் இந்த அச்சம் உண்மையானது தான் என்பது போல கடந்த 16ம் தேதி ஒரு சம்பவம் அரங்கேறியது. அதுவும் ஏதேச்சையாக, கொல்கட்டா கலவரம் ஏற்பட்ட அதே நாளிலேயே, அந்த சோகத்தை விவரிக்கும் திரைப்படத்தின் 'டிரைலர்' வெளியீட்டு விழா தடுக்கப்பட்டிருக்கிறது.
கொல்கட்டாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில், தி பெங்கால் பைல்ஸ் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவினர் தயாராக இருந்தனர். அப்போது, தடதடவென ஹோட்டலுக்குள் நுழைந்த போலீசார் மின் இணைப்பை துண்டித்தனர்.
திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்படவிருந்த, 'புரொஜெக்டர்' பறிமுதல் செய்யப்பட்டது. இதை பார்த்த இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி மிரண்டு போனார்.
'படத்தின் வெளியீட்டை தடுத்தால் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்' என அவர் தெரிவித்துள்ளார்.
முர்ஷிதாபாதில் முஸ்லிம்கள் மக்கள் தொகை பெருகி வருவது, எல்லையோர மாவட்டங்களில் கோவில்கள் இடிக்கப்படுவது ஆகியவை ஹிந்துக்களிடையே லேசாக புகைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப் படுகிறது.
விபரீதம்
தவிர, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறி வரும் முஸ்லிம்களாலும் பிரச்னைகள் பூதாகரமாகி உள்ளன.
இந்த தருணத்தில் இந்தியா - பாக்., பிரிவினையின்போது நிகழ்ந்த சோக வரலாற்றை மேற்கு வங்க மக்கள் நினைவுகூர்ந்தால் ஆளுங்கட்சிக்கு விபரீதமாகவே முடியும் என்ற பேச்சும் நிலவுகிறது.
அதிலும், தி பெங்கால் பைல்ஸ் திரைப்படம், திட்டமிட்டபடி வரும் செப்., 5ம் தேதி வெளியானால், ஹிந்துக்களை பாதுகாக்க பா.ஜ.,வால் மட்டுமே முடியும் என்ற பிம்பம் உருவாகும். அதை உடைக்கவே தற்போது திரிணமுல் காங்., முயன்று வருகிறது.
ஒரு வகையில் பார்த்தால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கண்ணாடி அறைக்குள் அமர்ந்து கல் எறியும் கதை தான் இது.
- நமது சிறப்பு நிருபர் -