'குவாரிக்கு ரெய்டு வர்றாங்க...!' உஷார்படுத்திய 'வாய்ஸ் மெசேஜ்'; கனிம வளத் துறையின் 'கடமையுணர்வு'
'குவாரிக்கு ரெய்டு வர்றாங்க...!' உஷார்படுத்திய 'வாய்ஸ் மெசேஜ்'; கனிம வளத் துறையின் 'கடமையுணர்வு'
UPDATED : மார் 14, 2024 05:00 AM
ADDED : மார் 14, 2024 12:57 AM

மேற்கு மாவட்டங்களில் உள்ள குவாரிகளை அளப்பதற்கு, கனிம வளத் துறை அதிரடி 'ரெய்டு' வரவுள்ளனர் என்று, 'வாட்ஸாப் --- வாய்ஸ் மெசேஜ்' வாயிலாக பரவிய தகவல், இத்துறையில் விளையாடும் மாமூல் கலாசாரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் கனிம வளக்கொள்ளை அதிகரித்திருப்பதாக பரவலான புகார் உள்ளது.
குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில், அளவுக்கு அதிகமாக கனிம வளக் கொள்ளை நடப்பதாக, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மாமூல்
கனிம வளத் துறையினர், குவாரிகளுக்கு அளவுக்கு அதிகமாக அபராதம் விதிக்கின்றனர்; மாமூல் தொகையை பல மடங்கு அதிகரித்து விட்டனர்; கொள்ளளவுக்கு தகுந்த அளவு குவாரிகளை செயல்பட அனுமதிப்பதில்லை என்று, தமிழக அரசு மீது குவாரி உரிமையாளர்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், குவாரிகளில் சட்ட விரோதமாக கற்கள் எடுப்பதும் தொடர்கிறது.
கனிம வளக் கொள்ளையில், குவாரி உரிமையாளர்களுக்கும், கனிம வளத் துறையினருக்கும் இணக்கம் இருப்பதாக புகார்கள் உள்ளன.
இதை உறுதி செய்யும் வகையில், 'வாய்ஸ் மெசேஜ்' குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களின் வாட்ஸாப் குழுக்களில் பரவி வருகிறது.
அதில் பேசும், கோவை மாவட்ட குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர், 'ஒரு ரகசியத் தகவல்' என்று கூறி, 'இந்த வாரத்தில் 'பிளையிங் ஸ்குவாடு' போட்டு, குவாரிகளை அதிரடியா சோதனை பண்ண வர்றாங்க' என்ற தகவலைப் பகிர்கிறார்.
'திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஜல்லி விலையை ஏற்றியதால் வந்த புகாரின் அடிப்படையில், இந்த ரெய்டு நடக்கப் போகிறது' என அதில் தெரிவிக்கிறார்.
இறுதியாக, 'தமிழ்நாடு அளவுல பெரிய டீம் 'பார்ம்' பண்ணிருக்காங்க. எப்ப வேணும்னாலும் வரலாம். அதனால ஜாக்கிரதையா இருந்துக்கோங்க... முடிஞ்சா குவாரி ஆப்பரேஷனையே இந்த மாவட்டங்கள்ல நிப்பாட்டி வச்சுக்கோங்க' என்றும் எச்சரிக்கிறாார்.
தண்டோரா
கனிம வளத்துறை நடத்தவிருக்கும் அதிரடி ரெய்டு, இப்படி, 'வாய்ஸ் மெசேஜ்' மூலமாக, குவாரி உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே தண்டோரா போடப்பட்டுள்ளது.
அதற்குப் பின், சில நாட்களுக்கு, எந்த குவாரியும் இயங்காது என்பதால், 'இல்லீகல் மைனிங்' தொடர்பாக எந்த சோதனையும் நடத்தி, நடவடிக்கை எடுக்க வாய்ப்புஇல்லை.
கனிம வளத் துறையில் மாநில அளவில் எடுக்கப்பட்ட முடிவு முன் கூட்டியே வெளியாகியிருப்பது, இத்துறையில் விளையாடும் மாமூலை அப்பட்டமாக அம்பலத்துக்கு கொண்டு வந்து உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

