திருப்பரங்குன்றம் மலையை காக்க ஒலித்த கோஷம் 'குன்றத்து மலை குமரனுக்கே': 1216 பேர் கைது
திருப்பரங்குன்றம் மலையை காக்க ஒலித்த கோஷம் 'குன்றத்து மலை குமரனுக்கே': 1216 பேர் கைது
ADDED : பிப் 05, 2025 06:40 AM

திருப்பரங்குன்றம் : மதுரை திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும், மீட்கவும் கோரி நேற்று 144 தடையை மீறி கோயிலுக்குள் ஒன்று கூடிய பக்தர்கள் 'குன்றத்துமலை குமரனுக்கே', 'வீரவேல் வெற்றிவேல்' என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறியதாக நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு மண்டபத்திலும், வீட்டுச்சிறையிலும் வைக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு வெட்டி உயிர்ப்பலி கொடுக்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. கோயிலின் புனிதத்தன்மையை பாதிப்பதாக கூறி ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மலையை 'சிக்கந்தர் மலை' என்று கூறி சில அமைப்புகள் ஆக்கிரமிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த ஹிந்து முன்னணி, நேற்று திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது.
இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீசார் அனுமதி மறுத்தனர். மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு முதலே திருப்பரங்குன்றத்தில் வசிக்காதவர்களை போலீசார் வெளியேற்றினர்.
எல்லைகளில் சோதனை
போலீஸ் கமிஷனர் லோகநாதன், தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா தலைமையில் 5 எஸ்.பி.,க்கள் உட்பட 3 ஆயிரம் போலீசார் நேற்று காலை முதலே மதுரை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து தெருக்களின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை நகர், மாவட்ட எல்லைகளில் வெளியூர் வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.
மதுரை ஆதினத்திற்கும் தடை
அதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திருப்பூரில் இருந்து ரயிலில் திருப்பரங்குன்றம் வந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்திலும், வீட்டிலும் சிறை வைக்கப்பட்டனர். மதுரை ஆதினமும் மடத்தை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டது.
கோயிலுக்குள் ஆர்ப்பாட்டம்
அதேநேரம் பக்தர்கள் தனித்தனியாக திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சென்று வழிபட போலீசார் அனுமதித்தனர். அப்படி சென்று தரிசனம் செய்தவர்கள் மதியம் 12:30 மணிக்கு சஷ்டி மண்டபம் வழியாக வெளியே வந்தனர். அப்படி வந்த 500க்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபம் முன்பு அமர்ந்து 'குன்றத்து மலை குமரனுக்கே' 'வீரவேல் வெற்றி வேல்', 'காப்போம் காப்போம் முருகன் மலையை காப்போம்' என கோஷமிட்டனர். இதில் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
இதை எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சியுற்று உடனடியாக மண்டபத்திற்கு வந்து வலுக்கட்டாயமாக அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் கோஷமிட்டவாறே ஓட, அவர்களை விரட்டிப்பிடித்து கைது செய்தனர். சுவாமி தரிசனத்திற்கு வந்து போராட்டத்தில் தாங்களாக முன்வந்து பங்கேற்ற துாத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரையும் கைது செய்தனர். பக்தர் ஒருவர் கன்னத்தில் 16 அடி நீளமுள்ள வேல் குத்தி கோயிலுக்கு நடைபயணமாக வந்தார். கோயில் வரை அனுமதித்த போலீசார் பின்னர் வேலை அகற்ற செய்து அவரை கைது செய்தனர்.
நேற்று மதியம் வரை மொத்தம் பெண்கள் உட்பட 485 பேரும், திருப்பரங்குன்றத்திற்கு தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட 731 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றத்தில் டவுன் பஸ்கள் அனுமதிக்கப்படாததால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் 'பாதயாத்திரையாக' வந்தனர்.
மதியம் 3:15 மணிக்கு கோயில் முன் நடந்த திடீர் போராட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், திருச்செங்கோடு, துாத்துக்குடி பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அவர்கள் கூறுகையில், 'போலீசார் தடுத்தாலும் ஹிந்துக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் திருப்பரங்குன்றத்திற்கு திரண்டு வந்து போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றோம்' என்றனர்.