த.வெ.க., தலைவர் விஜய் கோவை வருகை; அ.தி.மு.க., மாஜிக்கள் இணைய வாய்ப்பு: பயணத்திட்டத்தை ரகசியம் காக்கும் நிர்வாகிகள்
த.வெ.க., தலைவர் விஜய் கோவை வருகை; அ.தி.மு.க., மாஜிக்கள் இணைய வாய்ப்பு: பயணத்திட்டத்தை ரகசியம் காக்கும் நிர்வாகிகள்
ADDED : டிச 18, 2025 05:38 AM

கோவை: த.வெ.க., தலைவர் விஜய், இன்று கோவை வர உள்ள நிலையில், அ.தி.மு.க., முன்னாள் எம்,எல்.ஏ., உள்ளிட்டோர், அவரது முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளதாக, த.வெ.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த, 2024 பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கிய விஜய், அதே ஆண்டு அக்டோபரில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, முதல் அரசியல் மாநாட்டையும் கடந்த ஆகஸ்ட்டில் மதுரையில் இரண்டாது மாநாட்டையும் நடத்தினார். அதன் பின், சட்டசபை தேர்தலை குறிவைத்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடக்கினார்.
அந்த வகையில் கடந்த செப்., 27 ல் கரூரில் பேசியபோது கூட்டநெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். இதனால் சிறிய இடைவெளிக்கு பின், கடந்த நவ., 23ல் மீண்டும் தனது பயணத்தை துவங்கிய விஜய், டிச.,9ம் தேதி புதுச்சேரியில் த.வெ.க., பொதுக்கூட்டத்தில் பேசினார். இதன் தொடர்ச்சியாக, கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக, ஈரோட்டில் இன்று மக்கள் சந்திப்பை நடத்துகிறார்.
இதற்காக இன்று காலை 9:30 மணிக்கு, விஜய் கோவை வருகிறார். சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்லும் அவர், அங்கு அரை மணி நேரம் கட்சியினரை சந்திக்க உள்ளார். அங்கு, முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஒருவர் தலைமையில், த.வெ.க., வில் பலரும், இணைய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்ச்சிக்கு பின், விஜய், காலை 11:30 மணிக்கு ஈரோடு மாவட்டத்துக்கு புறப்படுகிறார். விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, சரளை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, இரவு 7:30 மணிக்கு, கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். விஜய் வருகை குறித்த விவரங்கள் தெரிந்தால், கோவை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், அதிகளவு கூட்டம் கூடும் என்பதால், அவரது வருகை குறித்தும், பயணத் திட்டம் குறித்தும் த.வெ.க. நிர்வாகிகள் ரகசியம் காத்து வருகின்றனர்.

