கரூர் செல்ல கோர்ட்டில் அனுமதி கேட்கும் விஜய்; த.வெ.க.,வினர் அதிர்ச்சி
கரூர் செல்ல கோர்ட்டில் அனுமதி கேட்கும் விஜய்; த.வெ.க.,வினர் அதிர்ச்சி
UPDATED : செப் 30, 2025 04:41 AM
ADDED : செப் 30, 2025 04:32 AM

சென்னை: கரூர் செல்வதற்கு அனுமதி கேட்டு, நீதிமன்றத்தை நாட, விஜய் முடிவு செய்துள்ளதால், த.வெ.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
த.வெ.க., தலைவர் விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வந்தார். கடந்த 27ம் தேதி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில், அவர் பிரசாரம் செய்தார்.
கரூரில் இரவு விஜய் பேசியபோது, கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட, 41 பேர் இறந்தனர். மேலும், 110க்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனி விமானம்
இந்த சம்பவம் நடந்ததும், அங்கிருந்து அவசர அவசரமாக திருச்சிக்கு காரில் விஜய் சென்றார். அங்கிருந்து தனி விமானத்தில், சென்னை வந்து சேர்ந்தார்.
நடந்த சம்பவத்திற்கான காரணத்தை விஜய் தெளிவுப்படுத்துவார் என, திருச்சி விமான நிலையத்திலும், சென்னை வீட்டிலும் காத்திருந்த தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதுவுமே சொல்லாமல் சென்று விட்டார் விஜய்.
மேலும், உயிரிழந்த தொண்டர்கள் குடும்பத்தினரையும், பொதுமக்களையும், காயம் அடைந்தோரையும் சந்தித்து, விஜய் ஆறுதல் கூறுவார் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்று வரை அவர் செல்லவில்லை. கட்சியின் முக்கியமான இரண்டு நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதால், இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.
தேர்தல் பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா வாயிலாக, சி.பி.ஐ., விசாரணை கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விட்டனர்.
ஆனால், கரூர் செல்வதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாட, விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இதனால், த.வெ.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
போலீஸ் அனுமதி
இதுகுறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
கரூர் சென்று ஆறுதல் கூறாமல், விஜய் காலம் தாழ்த்துவதால், தவறு அவர் மீது இருப்பதாக, பல்வேறு கட்சியினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கட்சியினருக்கும் இது பெரும் குறையாக உள்ளது.
சொந்தக் கட்சி தொண்டர்களையும், குடும்பத்தினரையும் பார்ப்பதற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை. அனுமதி கேட்டு நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை. விஜய் மற்றும் அவர் கூட இருப்பவர்களின் நடவடிக்கைகள் எதுவுமே புரியவில்லை. இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.