இறந்தவர்கள் இன்னும் வாழும் வாக்காளர் பட்டியல்: சென்னையில் 10 லட்சம் பேர் வரை நீக்கம்?
இறந்தவர்கள் இன்னும் வாழும் வாக்காளர் பட்டியல்: சென்னையில் 10 லட்சம் பேர் வரை நீக்கம்?
ADDED : டிச 02, 2025 03:40 AM

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்து வரும் நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் பெயரும் இருப்பதால், சென்னையில், 7 முதல் 10 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் உட்பட, 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 40.04 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், கணக்கீட்டு படிவத்தை, 38 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். அதிலும், பலருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தான் படிவம் பெற்றுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள, 2.04 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்படாமலேயே உள்ளன.
அதேநேரம், பூர்த்தி செய்த படிவங்களை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பெற்று வருகின்றனர். இதற்கு முன், டிச., 4 கடைசி நாளாக இருந்த நிலையில், வரும் 11ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட படிவங்கள் பெற்றப்பட்டு, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதில், 15 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமல், பட்டியலில் இருப்பது, சிறப்பு திருத்த பணியில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:
சென்னையில் உயிரிழந்தவர்களின் வாரிசுகள், அவர்கள் இறந்ததை தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தி, நீக்கியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், இறந்தவர்கள், இன்றும் வாக்காளர் பட்டியலில் மட்டும் வாழ்கின்றனர்.
அதேபோல், சென்னைக்கு வந்து, பின் இடம் பெயர்ந்தோர், சென்னை மாவட்டத்தில் இருந்து புறநகர் மாவட்டத்திற்கு சென்றோர், அங்கேயும் வாக்காளர்களாக உள்ளனர். அவர்கள் ஏற்கனவே இருந்த இடத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து, தங்களது பெயரை நீக்காமல் உள்ளனர்.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் மட்டும், 7 முதல் 10 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் வரை, தற்போது பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

