மக்கள் பார்வையில் கேலி பொருளாகிறோம்: பார்லி., அமளியால் ஜக்தீப் தன்கர் வேதனை
மக்கள் பார்வையில் கேலி பொருளாகிறோம்: பார்லி., அமளியால் ஜக்தீப் தன்கர் வேதனை
ADDED : நவ 30, 2024 01:09 AM

பார்லிமென்ட் அலுவல்களை நான்காவது நாளாக, எதிர்க்கட்சியினர் நேற்றும் முடக்கினர். இதனால் வேதனையடைந்த துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர், “மக்களின் பார்வையில் நாம் அனைவரும் கேலி பொருளாகி வருகிறோம். இது மிகவும் தவறான முன்னுதாரணம்,” என்றார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகிறது.
அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, சபையை முடக்கி வருகின்றனர். நான்காவது அலுவல் நாளான நேற்று, காலையில் ராஜ்யசபா கூடியதும் சபை தலைவர் ஜக்தீப் தன்கர் பேசியதாவது:
ஒத்திவைப்பு தீர்மானங்கள் கோரும், 267 விதியை சபை அலுவல்களுக்கு குறுக்கீடு செய்வதற்கான ஆயுதமாகவே எதிர்க்கட்சிகள் மாற்றி விட்டனர்.
மக்களின் பார்வையில் நாம் அனைவரும் கேலி பொருளாகி வருகிறோம். இது மிகவும் தவறான முன்னுதாரணம். இதை ஊக்கப்படுத்த முடியாது.
நம் நடவடிக்கைகள் எல்லாமே பொதுமக்களின் நலன்களை மையமாக வைத்து செயல்பட வேண்டும்.
ஆனால், தற்போது சபையில் நடப்பது அதுபோல் தெரியவில்லை. இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
தினந்தோறும் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பல்வேறு முக்கிய விஷயங்கள், மக்களின் பிரச்னைகள் எல்லாவற்றையும் சபையில் விவாதிக்க வேண்டிஇருக்கிறது.
ஆனால், அதை புறந்தள்ளிவிட்டு அமளியிலும், கூச்சல் குழப்பத்திலும் ஈடுபடுவது சரியல்ல. பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து விதி எண் 267ன் கீழ், 18 ஒத்திவைப்புத் தீர்மானங்கள் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், சபை விதிகளுக்கு பொருந்தாது என்பதால் நிராகரிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான கோஷங்களை எழுப்பினர். சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்த சபை தலைவர், வேறு வழியின்றி சபையை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
லோக்சபாவிலும் காலையில் கேள்வி நேரம் அலுவல்கள் துவங்கியதும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபையை ஒத்திவைத்துவிட்டு, அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பினர்.
இன்னும் சிலரோ, மணிப்பூரில் கலவரங்கள் ஓய்ந்த பாடில்லை; அதுகுறித்தும் வாதம் நடத்த வேண்டும் என்றனர்.
அவர்களை, சபாநாயகர் ஓம் பிர்லா எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்பதாக தெரியவில்லை. இதையடுத்து, பகல் 12:00 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
இடைவெளிக்குப் பின், மீண்டும் சபை கூடியபோதும் அமளி தொடரவே, திங்கட்கிழமை வரை லோக்சபாவும் ஒத்திவைக்கப்பட்டது.
- நமது டில்லி நிருபர் -