கோவையில் 10ம் பிடிக்க என்ன வேண்டும்?: கேளுங்கள் தருகிறேன் என்கிறார் முதல்வர்
கோவையில் 10ம் பிடிக்க என்ன வேண்டும்?: கேளுங்கள் தருகிறேன் என்கிறார் முதல்வர்
UPDATED : ஜூன் 18, 2025 03:41 AM
ADDED : ஜூன் 18, 2025 01:25 AM

சென்னை: 'கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும் வகையில், தேர்தல் பணிகளை செய்வோம்' என, முதல்வர் ஸ்டாலினிடம், கவுண்டம்பாளையம் தொகுதி நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.
சட்டசபை தேர்தல் பணிகளை துவங்கியுள்ள தி.மு.க., 'உடன்பிறப்பே வா' என்ற பெயரில், தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்துப் பேசும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சந்திப்பு
அதில் பங்கேற்கும் நிர்வாகிகளிடம், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வரிசையில் நேற்று பரமத்தி வேலுார், பரமக்குடி, கவுண்டம்பாளையம் ஆகிய முன்று சட்டசபை தொகுதி நிர்வாகிகளை, அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
தொகுதி எம்.எல்.ஏ., செயல்பாடு, மாவட்டச்செயலர்கள், பொறுப்பு அமைச்சர்களின் ஒத்துழைப்பு குறித்து, அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்தார்.
பின்னர், அரசின் சாதனைகள் மக்களிடம் எந்த அளவுக்கு சென்று சேர்ந்துள்ளன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
கவுண்டம்பாளையம் தொகுதி நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர், 'அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில், 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வலுவாக இருந்துள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சியே முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.
அந்த சூழலை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் அறிவித்து, அதை செய்து முடித்திருக்கிறோம். அதனாலேயே உள்ளாட்சி தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
மாற்றம்
குறிப்பாக, தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலையை, கோவை தொகுதியிலேயே நாம் வீழ்த்தி இருக்கிறோம்.
அதனால், கோவைப்பகுதி மக்கள் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. அந்த சூழலே நீடிப்பதாகத்தான் நம்புகிறேன்.
உளவுத்துறை வாயிலாக கிடைக்கும் தகவல்களும் அதைத்தான் உறுதி செய்கின்றன.
அதனால், எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மமதையில் அலட்சியமாக இருந்து விடாமல், வெற்றிக்காக தீவிரமாக உழைத்தால், இம்முறை 10ல் எட்டு தொகுதிகளையாவது நம்மால் கைப்பற்ற முடியும். அதற்கான உறுதியோடு, கட்சியினர் ஒவ்வொருவரும் தேர்தலை நோக்கி பணியாற்ற வேண்டும்.
இதற்காக, கட்சி தலைமையிடம் இருந்தும், ஆட்சி நிர்வாகத் தரப்பில் இருந்தும் என்ன வேண்டும் என்று கேட்டாலும், அதை உடனே செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
கட்சிக்குள் கோஷ்டி பூசல் இல்லாமல் உழைத்தால், இம்முறை நிச்சயம் வெற்றி பெறலாம். வெற்றிச் செய்தியோடு உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க ஆசைப்படுகிறேன்' என்றார்.
உடனே நிர்வாகிகள் அனைவரும், 'இந்த தேர்தலில், கோவை மாவட்டத்தில், 10 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி வாகை சூடும் வகையில் கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை செய்வோம்.
நிரூபிப்போம்
'அதற்கு, உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். வெளியில் இருந்து வருபவர்களை வேட்பாளர் ஆக்காமல், கட்சிக்காக உழைத்தவர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும்.
'இப்படி செய்யும்பட்சத்தில், 10க்கு 10ஐயும் வென்று காட்டுவோம். கோவை மாவட்டம் ஒன்றும் வெற்றி பெற முடியாத மாவட்டம் அல்ல என்பதை இம்முறை நிரூபித்துக் காட்டு வோம். இதை ஒரு சபதமாகவே ஏற்கிறோம்' என்றனர்.