ராகுலுக்கு என்ன ஆச்சு?: புலம்பும் காங்கிரஸ் தலைவர்கள்
ராகுலுக்கு என்ன ஆச்சு?: புலம்பும் காங்கிரஸ் தலைவர்கள்
ADDED : நவ 08, 2026 03:34 AM

புதுடில்லி: காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் சமீபத்திய நடவடிக்கைகள், அக்கட்சியின் சீனியர் தலைவர்களை வருத்தப்பட வைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக அடிக்கடி ஏதாவது புதிதாக, நவீன முறையில் போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது ராகுலின் விருப்பம். அதன்படி ராமர் கோவில் திருட்டு விவகாரத்தில் பார்லி., வாசலில் ஒரு உண்டியலை வைத்து போராட்டம் நடத்தினார்.
ராகுலும், அவருக்கு நெருக்கமான காங்., - எம்.பி., பவன் கேராவும் கையில் ஒரு பொம்மை குரங்கை வைத்துக் கொண்டு இதுதான் மோடி என கிண்டலாக தர்ணா நடத்தினர். பின், திடீரென மோடி வீட்டு முன் போராட்டம்… தேர்தல் கமிஷன் முன் அதிரடி தர்ணா… உச்ச நீதிமன்றத்திலும் அதிரடியாக புகுந்து போராட்டம்… கடைசியாக மாதிரி பார்லிமெண்ட் நடத்தி தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை நீக்கினார் ராகுல்.
இதற்கெல்லாம் மேலாக, ராகுலுக்கு நெருக்கமானவர்கள் ஒரு அதிரடி திட்டத்தை அவரிடம் சொன்னார்கள். 'ஒரு சவப்பெட்டி தயார் செய்து அதில் பா.ஜ., என எழுதுவோம். அந்த பெட்டியை டில்லியின் பிரதான தகன இடமான யமுனை நதிக் கரையில் உள்ள நிகம்போக் காட் என்ற இடத்தில் எரித்துவிடுவோம். அத்துடன் அக்கட்சியின் கதை முடிந்துவிடும்' என, தெரிவிக்க படு குஷியான ராகுல் உடனே இதை செய்வோம் என்றாராம்.
ஆனால் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உட்பட பல சீனியர் தலைவர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனராம். 'இது கேவலமான விஷயம்; இப்படி செய்தால் நமக்கு பெரும் பிரச்னை வரும். இதை பா.ஜ., தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும்' என, தலைவர்கள் சொல்ல, வேறு வழியில்லாமல் வெறுப்போடு தகன திட்டத்தை கைவிட்டாராம் ராகுல்.
'உ.பி.,யில் கட்சி எங்கே இருக்கிறது என்றே தெரியாத நிலையில் அதை வளர்ப்பதை விட்டுவிட்டு இப்படி பைத்தியக்காரத்தனமான வேலைகளில் ராகுல் ஈடுபட்டுள்ளாரே. இவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையே' என காங்கிரசின் சீனியர் தலைவர்கள் நொந்து போயுள்ளனராம்.
