கூடுதல் கட்டணம் செலுத்தி பதிவான பத்திரங்கள் நிலை என்ன?
கூடுதல் கட்டணம் செலுத்தி பதிவான பத்திரங்கள் நிலை என்ன?
UPDATED : ஏப் 18, 2024 12:44 AM
ADDED : ஏப் 17, 2024 10:02 PM

சென்னை: நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சுற்றறிக்கை அடிப்படையில், கூடுதல் கட்டணம் வசூலித்து பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் நிலை குறித்து, பதிவுத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
பதிவுத் துறை பிறப்பித்த சுற்றறிக்கை அடிப்படையில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் 50 சதவீதம் வரை உயர்ந்தன.
இந்த உயர்த்தப்பட்ட மதிப்பு அடிப்படையில், சொத்து பரிமாற்றத்தில் முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இவற்றை எதிர்த்து, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பான, 'கிரெடாய்' சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதிவுத் துறை தலைவர் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து, கடந்த மார்ச் 6ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மார்ச் 6க்கு பின் பதிவாகும் அனைத்து பத்திரங்களுக்கும், கூடுதல் முத்திரை தீர்வை, கூடுதல் பதிவு கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்த வழக்கு, உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்ட பின், பழைய முறையில் கூடுதல் கட்டணம் வசூலித்தது தவறு என தெரிவித்துள்ளது.
வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை மனுதாரருக்கு திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிட்டது.
பதிவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வழிகாட்டி மதிப்பு உயர்வு தொடர்பான சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்ட பின், பதிவான அனைத்து பத்திரங்களுக்கும் கூடுதல் முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளன.
இவற்றில், திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவான ஒரு பத்திரத்துக்கு வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை, திருப்பித் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டதில், பதிவுத் துறை சார்பில் மேல்முறையீடு செய்து இருக்கிறோம். அந்த சுற்றறிக்கையின்படி பத்திரப்பதிவு மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியை பெறுவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், 3,000த்துக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகி உள்ள நிலையில், அனைவருக்கும் கூடுதல் கட்டணத்தை திருப்பித் தருவது, பல்வேறு சிக்கலை ஏற்படுத்தும். இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

