யாருடையது அந்த 'ஆடி' கார்? மாணவி பாலியல் வன்முறை வழக்கில் மர்மம்
யாருடையது அந்த 'ஆடி' கார்? மாணவி பாலியல் வன்முறை வழக்கில் மர்மம்
ADDED : டிச 27, 2024 05:15 AM

சென்னை: 'சென்னை அண்ணா பல்கலை மாணவியை, பாலியல் வன்முறை செய்த நபரின் குடும்பமே குற்றப் பின்னணி கொண்டது' என, போலீசார் தெரிவித்தனர்.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், கடந்த, 23ம் தேதி, இரவு, 8:00 மணியளவில் காதலனுடன், 19 வயது மாணவி பேசிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த மர்ம நபர், காதலனை மிரட்டி விரட்டி விட்டு, மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, சென்னை கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து, அதே பகுதியில் உள்ள, மண்டபம் தெருவைச் சேர்ந்த ஞானசேகரன், 37, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜன., 8 வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது, அவருக்கு கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யார் அந்த சார்?
இச்சம்பவம் தொடர்பாக, கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில், தன்னை பாலியல் வன்முறை செய்த நபர், மூன்று, 'ஆப்ஷன்' கொடுத்ததாக கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
முதல் ஆப்ஷனாக, காதலருடன் நான் பேசிய வீடியோவை, கல்லுாரி நிர்வாகத்திடம் அளித்து, என்னை இந்த கல்லுாரியில் இருந்து நீக்குவதாக மிரட்டினார். இரண்டாவது ஆப்ஷனாக, 'என்னுடன் கொஞ்ச நேரம் இரு' என்றார். மூன்றாவது ஆப்ஷனாக, 'அந்த சார் கூட கொஞ்ச நேரம் இரு' என்றார். இவ்வாறு அந்த மாணவி கூறியிருக்கிறார்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த, 'அந்த சார் யார்?' என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை, பாலியல் வன்முறை செய்த நபர், அங்கிருந்த, 'ஆடி' கார் பின்புறம் தரையில் அமர வைத்துள்ளார். அப்படியானால், அந்த கார் யாருடையது, அதில் வந்த நபர் யார் என்பதும் மர்மமாக உள்ளது.
மாணவியை வன்முறை செய்த நபர், மிரட்டுவதற்கு முன், அவருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய நபரிடம், 'நான் அவளை மிரட்டி விட்டு விடுவேன்' என, கூறியுள்ளார். அந்த நபர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த தகவல்கள் அனைத் தும், எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
போலீசார், மாணவியை பாலியல் வன்முறை செய்த நபர் ஒருவர் தான்; அவர் தான் ஞானசேகரன் என கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி உள்ளனர். ஆனால், மாணவியின் புகாரும், முதல் தகவல் அறிக்கையில் பதிவாகி உள்ள தகவல்களும், இச்சம்பவத்தில் முக்கிய புள்ளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்கிறது.
தொழில் அதிபர் கடத்தல்
இது தொடர்பாக, போலீசார் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் முத்துகுமார், 60, மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, ஞானசேகரன், அவரின் சகோதரர் சுரேஷ் உள்ளிட்ட, 10 பேர் கைது செய்யப்பட்டனர்,
அவர்களில், மூன்று பேர் பெண்கள். ஞானசேரன் உள்ளிட்டோரிடம் இருந்து, துப்பாக்கி, கத்தி, சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஞானசேகரன் மீது, திருவான்மியூர், சாஸ்திரி நகர், நந்தம்பாக்கம் காவல் நிலையங்களில், திருட்டு, வழிப்பறி, பாலியல் தொல்லை வழக்குகள் உள்ளன. அவர் ஒரு ரவுடி. ஞானசேகரனின் குடும்பமே குற்றப் பின்னணி கொண்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.