இந்திரா கர்நாடகாவுக்கு வந்தது ஏன்? வாக்காளர் பட்டியலில் சேர்க்க 'அமாவாசை' எதிர்ப்பு
இந்திரா கர்நாடகாவுக்கு வந்தது ஏன்? வாக்காளர் பட்டியலில் சேர்க்க 'அமாவாசை' எதிர்ப்பு
ADDED : ஏப் 02, 2024 11:14 PM

முன்னாள் பிரதமர் இந்திராவுக்கும், கர்நாடகாவின் தொட்டபல்லாபூருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவர் மீது பதிவான வழக்கு தொடர்பான விசாரணைக்கு, இங்கு வந்ததை மூத்த வக்கீல்கள் இன்னும் மறக்கவில்லை.
லோக்சபா தேர்தலில், புதிய ஆட்சியாளரை தேர்வு செய்ய, இந்திய வாக்காளர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், அன்றைய நாட்களில் நடந்த பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன.
கர்நாடகாவுக்கும், மறைந்த பிரதமர் இந்திராவுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. 1978ல், சிக்கமகளூரு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யானார். அந்த கால கட்டத்தில், தன் மீது பதிவான வழக்கு விசாரணைக்கு ஆஜராக, தொட்டபல்லாபூர் நீதிமன்றத்துக்கு இந்திரா வந்திருந்ததை, பலரும் நினைவுகூர்கின்றனர்.
அவசர நிலை
இந்திரா பிரதமராக இருந்தபோது, 1975ல் அவசர நிலையை அமல்படுத்தினார். இதை எதிர்த்து நாடே கொந்தளித்தது. போராட்டம் நடத்தியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இது இந்திய வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்தது.
மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பால், 1977 லோக்சபா தேர்தலில் தனது பாரம்பரிய தொகுதியான உ.பி.,யின் ரேபரேலியில் இந்திரா தோற்றார். மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.
இந்த வேளையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. எனவே இங்கிருந்து, ராஜ்யசபாவுக்கு இந்திராவை தேர்வு செய்ய, அன்றைய முதல்வர் தேவராஜ் அர்ஸ் முடிவு செய்தார்.
இதற்காக உ.பி.,யை சேர்ந்த இந்திராவின் பெயரை, கர்நாடக வாக்காளர் பட்டியலில் சேர்க்க திட்டமிட்டார். தொட்டபல்லாபூர் அருகில், நந்திமலை அடிவாரத்தில் உள்ள விஷ்ணு ஆசிரமம் முகவரியில், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இந்திரா மனு வழங்கினார்.
தொட்டபல்லாபூரில் வழக்கு
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, தொட்டபல்லாபூரை சேர்ந்த அமாவாசை நீலகண்டய்யா என்பவர், தொட்டபல்லாபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதில், 'விஷ்ணு ஆசிரம முகவரியில், இந்திரா நிரந்தரமாக குடியிருக்கவில்லை. தொட்டபல்லாபூர் தாலுகா அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ள சான்றிதழ்கள் பொய்யானவை. இது தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும். இந்திராவின் பெயரை வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கக் கூடாது' என கோரியிருந்தார்.
தொட்டபல்லாபூர் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன்ராவ் அமர்வு விசாரணை நடத்தியது. மனுதாரர் அமாவாசை நீலகண்டய்யா சார்பில், வக்கீல்கள் ராம் ஜெத்மலானி, லட்சுமி சாகர், ஜெகந்நாத் வாதிட்டனர். இந்திரா தரப்பில் வக்கீல்கள் ராமசாமி, ராஜேந்திர பாபு, நாகராஜன் ஆஜராகினர்.
விசாரணை நடந்தபோது, 1979ல் இந்திரா நீதிமன்றம் வர வேண்டிய நிலை உருவானது. சம்பவத்தன்று காலை 10:00 மணிக்கு தொட்டபல்லாபூருக்கு வந்து, 11:00 மணிக்கு நீதிமன்றத்தில் இந்திரா ஆஜரானார். 'நான் தாக்கல் செய்த சான்றிதழ் சரிதான்' என, விளக்கம் அளித்தார்.
ஐகோர்ட்டுக்கு மாற்றம்
அப்போது அவரது தரப்பு வக்கீல்கள், 'மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின்படி, இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்க வேண்டும். கீழ் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கூடாது' என வாதிட்டனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, பெங்களூரில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு, வழக்கு மாற்றப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின், புகார்தாரர் அமாவாசை நீலகண்டய்யா காலமானதால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்திரா மீதான வழக்கு, அன்றைய காலத்தில் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மூத்த வக்கீல்கள் இப்போதும் நினைவுகூர்கின்றனர். தொட்டபல்லாபூர் வரலாற்று பக்கங்களில் பதிவாகியுள்ளது.
இவரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்திராவை ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கும் திட்டம் கைவிடப்பட்டது. எனவே, கர்நாடகாவில் இருந்து ஏதேனும் ஒரு லோக்சபா தொகுதியில் இருந்து இந்திராவை வெற்றி பெறச் செய்து, லோக்சபாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, சிக்கமகளூரு காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்த சந்திரேகவுடா, இந்திராவுக்காக தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் நடந்த இடைத்தேர்தலில், இந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்று, லோக்சபாவுக்குள் நுழைந்தார் என்பது வரலாறு.
- நமது நிருபர் -

