விஜய் மீது சீமானுக்கு கோபம் ஏன்? காரணத்தை கண்டுபிடித்தது த.வெ.க.,
விஜய் மீது சீமானுக்கு கோபம் ஏன்? காரணத்தை கண்டுபிடித்தது த.வெ.க.,
ADDED : நவ 06, 2024 04:00 AM

சென்னை: நாம் தமிழர் கட்சியினர் சொந்தம் கொண்டாடி வந்த, தமிழ் தேசிய அரசியலை விஜய் தன் கொள்கையாக அறிவித்ததே, சீமானின் கோபத்திற்கு காரணம் என, தெரியவந்துள்ளது.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர், 2009ல் முடிவுக்கு வந்தது. அப்போது, அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும், அதற்கு தமிழகத்தில் உள்ள கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து, சினிமா இயக்குனராக இருந்த சீமான், தமிழ் தேசிய அரசியலை கையில் எடுத்து, 'நாம் தமிழர்' என்ற பெயரில், அரசியல் கட்சியை துவங்கினார். உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல்களில், தனித்து போட்டியிட்டு, தனி ஓட்டு வங்கியை, நாம் தமிழர் கட்சி உருவாக்கியது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில், விஜய் கட்சி துவங்குவதாக கூறியதும், அவருடன் கூட்டணி அமைக்க சீமான் விரும்பினார். இந்நிலையில், கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், 'திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது கட்சி கொள்கையாக இருக்கும்' என்றார். சீமான் கட்சி துவங்கி, 14 ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழ் தேசிய அரசியலை எந்த கட்சியும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
அதனால் இந்த விஷயத்தை, நாம் தமிழர் கட்சியினர் மட்டுமே சொந்தம் கொண்டாடி வந்தனர். இதனால், தேர்தல் காலங்களில் திரள் நிதி என்ற பெயரில், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவும் பெருகி வந்தது. கட்சியின் இணையதளத்தில் இதுகுறித்த வசூல் விபரங்களும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ் தேசிய அரசியல் கொள்கையை விஜய் கையில் எடுத்துள்ளதால், வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆதரவு மட்டுமின்றி, திரள் நிதியும், நாம் தமிழர் கட்சிக்கு குறையும் என்ற அச்சம் திடீரென எழுந்துள்ளது.
விஜய் மீதான சீமானின் கோபத்திற்கு இதுவே காரணம் என கண்டறிந்துள்ள த.வெ.க., வினர், அதை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பதிவிடுவதோடு, சீமானுக்கு சீரியஸாக பதிலடி கொடுக்கின்றனர்.
விஜயை வைத்து படம் இயக்குவதாக அறிவித்தது முதல், கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பியது வரை, பல்வேறு விஷயங்ளை பட்டியலிட்டு, விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு விஜய்யும், மறைமுகமாக ஆதரவு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.