ADDED : பிப் 06, 2025 01:20 AM

சென்னை, பிப். 6-
தமிழகத்தில் மலை கிராமங்களில், நில அளவை பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், நிலவரி திட்டம் வாயிலாக, புதிய பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் நத்தம் நில அளவை, நில உடைமை மேம்பாட்டு திட்டம் வாயிலாக, நிலங்கள் முறையாக அளக்கப்பட்டு, எல்லைகள் வரையறை செய்யப்படுகின்றன. அதன் அடிப்படையில், நில உடைமையை உறுதி செய்யும் பட்டாக்கள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றில் சமவெளி பகுதிகள் போன்று, மலை பகுதிகளில் நில அளவை பணிகள், ஒரே நேரத்தில், ஒரே வேகத்தில் நடப்பது இல்லை.
தமிழகத்தில், 15 மாவட்டங்களில், 43 தாலுகாக்களில், 600 மலை கிராமங்களில், நில அளவை பணிகளை மேற்கொள்வதில், பல்வேறு நடைமுறை பிரச்னைகள் வருகின்றன.
இந்நிலையில், நத்தம் நில அளவை, நில உடைமை மேம்பாட்டு திட்டத்துக்காக, நில அளவை பணிகள் மலை கிராமங்களில் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள சூழலில், இந்த இரு பிரிவிலும் வராத நிலங்களுக்கு, நிலவரி திட்டம் வாயிலாக புதிய பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நகர்ப்புற பகுதிகள் போன்று, மலை கிராமங்களில் நிலவரி திட்டத்தை செயல்படுத்தி, உரிமையாளர்களுக்கு புதிய பட்டா வழங்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நிலவரி திட்ட பட்டா இல்லாததால், மலை கிராமங்களில் பெரும்பாலான நிலங்கள் இன்னும் விவசாய வகைப் பாட்டிலேயே இருக்கின்றன.
இதனால், கட்டட அனுமதி போன்ற விஷயங்களுக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் வைத்து, நிலவரி திட்ட பணிகளை விரைவுபடுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், எதிர்பார்த்த வேகத்தில் இப்பணிகள் நடக்கவில்லை, ஆண்டுக்கு, 10 கிராமங்கள் என்ற அடிப்படையிலேயே நிலவரி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நத்தம் நில அளவை பணிகள், நில உடைமை மேம்பாட்டு திட்டத்தில் வராத கிராமங்களில், நிலவரி திட்ட பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவுக்கு உட்பட்ட 10 கிராமங்களில், இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வனத்துறை உரிமை கோருதல், நீதிமன்ற வழக்குகள் போன்ற காரணங்களால், பெரும்பாலான இடங்களில் நிலவரி திட்டப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.