ராகுல் பங்கேற்கும் காங்கிரஸ் மாநாடு தள்ளிப்போனது ஏன்?
ராகுல் பங்கேற்கும் காங்கிரஸ் மாநாடு தள்ளிப்போனது ஏன்?
ADDED : பிப் 27, 2026 05:32 AM

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில், காங்கிரஸ் -எம்.பி., ராகுல் பங்கேற்கும் தேர்தல் பிரசார மாநாட்டுக்கு அனுமதி கிடைக்காததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நிச்சயதார்த்தம் தமிழக காங்கிரஸ் கிராம கமிட்டிகளுக்கு, 2 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து, மார்ச் 5ல் மாநாடு நடத்த அக்கட்சி தலைமை திட்டமிட்டது.
அம்மாநாட்டில் பங்கேற்க, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு அழைப்பு விடப்பட்டது. அவரது தரப்பில், பிப்., 27, மார்ச் 3 மற்றும் 5ம் தேதி என, இந்த மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளில் வருவதாக ஒப்புதல் அளித்திருந்தார்.
மார்ச் 3ம் தேதி தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்த விழா நடப்பதால், மார்ச் 5ம் தேதி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இடமும் தேர்வு செய்யப்பட்டது.
மாநாடு நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டபோது, நிலையான செயல்பாட்டு விதிகளின் கீழ், 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும், அதற்கு அதிகமாக தொண்டர்கள் கூடுவர் என்றால், 15 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடவடிக்கை
இதனால், மார்ச் 5ல் மாநாட்டை நடத்த வேண்டுமெனில், அதற்கான அனுமதி பெற போதிய கால அவகாசம் இல்லை என்பதால், மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த பின் அல்லது அறிவிப்பதற்கு முன் மாநாடு நடத்தினால், மாவட்டம் வாரியாக தொண்டர்களை அழைத்து வருவது குறித்து, மாவட்டத் தலைவர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.
அதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'தி.மு.க., கூட்டணிக்கு எதிராக பொதுவெளியில் யாராவது கருத்து தெரிவித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்தார்.

