கூச்சல் குழப்பம் கொண்ட ராஜ்யசபா: எப்படி சமாளிப்பார் சிபிஆர்?
கூச்சல் குழப்பம் கொண்ட ராஜ்யசபா: எப்படி சமாளிப்பார் சிபிஆர்?
UPDATED : ஆக 24, 2025 11:25 AM
ADDED : ஆக 24, 2025 03:25 AM

புதுடில்லி: துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ., கூட்டணிக்கு பார்லிமென்டில் பலம் இருப்பதால், ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆர்.எஸ்.எஸ்.,சை பின்புலமாக கொண்ட ராதாகிருஷ்ணன், அனைவருடனும் நட்பாக பழக்கக்கூடியவர்; அதிர்ந்து பேசாதவர்; மிகவும் மென்மையானவர்.
'இப்படிப்பட்டவரால் கூச்சலும், குழப்பமுமாக உள்ள ராஜ்யசபாவை நிர்வகிக்க முடியுமா?' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. துணை ஜனாதிபதி பதவியில் இருப்பவர் தான், ராஜ்யசபாவின் தலைவர்; அவர்தான் சபையை வழிநடத்துவார்; லோக்சபாவில் சபாநாயகர் போல, ராஜ்யசபாவின் தலைவர் துணை ஜனாதிபதி.
பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, தினமும் ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்பி, சபைகளை நடக்கவிடாமல் செய்து வருகின்றன எதிர்க்கட்சிகள். இந்நிலையில், ராஜ்யசபாவின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள ராதாகிருஷ்ணன் எப்படி சமாளிக்கப் போகிறார்? மேலும், இவருக்கு ஹிந்தியும் ஒரு பிரச்னை; அதாவது, சரளமாக ஹிந்தியில் பேசுவாரா?
ராஜ்யசபாவின் துணை தலைவராக இருப்பவர், ஹரிவன்ஷ் நாராயண் சிங். பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் கட்சியைச் சேர்ந்த இவர், சிறந்த பத்திரிகையாளராக வாழ்க்கையை துவங்கி அரசியல்வாதியானவர்; அத்துடன், ஒரு எழுத்தாளரும் கூட. ராஜ்யசபாவின் தலைவர் துணை ஜனாதிபதியாக இருந்தாலும், அதிகமாக சபையை இவர்தான் திறம்பட நடத்தி வருகிறார்.
எனவே, 'ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியான பின், ஒரு சில நேரம்-, அதாவது, கேள்வி நேரத்தின்போது சபையை நடத்துவார். மற்ற பிரச்னைக்குரிய சமயங்களில், துணை தலைவர் சிங்தான் சபையை நிர்வகிப்பார்' என, சொல்லப்படுகிறது.
'முக்கியமான சமயங்களில், அதாவது, பிரதமர் ராஜ்ய சபாவில் பதில் அளிக்கும் சமயங்களில், ராதாகிருஷ்ணன் சபையை நடத்துவார்' என, சொல்லப்படுகிறது. எது எப்படியோ... துணை ஜனாதிபதி பதவியில் அமரப் போகும் இவருக்கு, ராஜ்யசபாவை வழிநடத்துவது பெரும் பிரச்னையாகவே இருக்கும்.