கர்நாடகா எல்லை வரை மெட்ரோ ரயில் சேவை: ஓசூர் வரை நீட்டிக்க தமிழக அரசு முயற்சிக்குமா?
கர்நாடகா எல்லை வரை மெட்ரோ ரயில் சேவை: ஓசூர் வரை நீட்டிக்க தமிழக அரசு முயற்சிக்குமா?
UPDATED : ஆக 28, 2025 06:29 PM
ADDED : ஆக 27, 2025 10:48 PM

ஓசூர்:கர்நாடகா மாநில எல்லை பகுதி வரை மெட்ரோ ரயில் வழித் தடம் அமைக்க, அம் மாநில அரசு ஆய்வு செய்ய துவங்கி உள்ளதால், ஓசூர் பகுதி மக்களின் கனவு கூடிய விரைவில் நனவாக போகிறது.
கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரில், பல முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், அம்மாநில மக்கள் மட்டுமின்றி, தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் அங்கு குடியேறி உள்ளனர்.
2 மணி நேரம்
இதனால், பெங்களூரு நகரில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஓசூரிலிருந்து பெங்களூரு செல்ல, 2 மணி நேரமாகிறது. குறிப்பாக, பெங்களூரில் உள்ள ஓசூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
அதனால், பல நிறுவனங்கள் அம்மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளன. எனவே, அம்மாநில அரசு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவையால் தான், போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது.
பெங்களூரு சில்க் இன்ஸ்டிடியூட் முதல் மாதவாரா வரையும், செல் ல கட்டா முதல் ஒயிட்பீல்டு வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை, நகரின் பெரும்பாலான பகுதிகளை இணைக்கின்றன.
குறைந்துள்ள நெரிசல்
இந்நிலையில், ராஜஸ்ரீய வித்யாலயா ரோடு முதல், பொம்மசந்திரா வரை மற்றொரு மெட்ரோ ரயில் சேவை, கடந்த, 10ம் தேதி துவங்கப்பட்டது.
இந்த வழித்தடத்தை, அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை நீட்டிப்பு செய்து, அங்கிருந்து ஓசூருக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்க மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவை துவங்கி உள்ளதால், 90,000 பேருக்கு மேல், அதில் பயணிக்க துவங்கி உள்ளனர்.
அதனால், பெங்களூரு - ஓசூர் சாலையில், 10 சதவீதம் வரை வாகன போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
அதுவே, அத்திப்பள்ளி வரை இன்னும், 12 கி.மீ., துாரம் மெட்ரோ ரயிலை நீட்டித்தால், போக்கு வரத்து நெரிசல் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக, கர்நாடகா மாநில அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் தகவல்
மேலும், கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளி அருகே, மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
அதனால், அத்திப்பள்ளி வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு அவசியம் என்ற முடிவுக்கு, கர்நாடகா மாநில அரசு வந்துள்ளது.
இத்திட்டம் பரிசீலனையில் இருப்பதாக, கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் திட்டவட்டமாக சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
'பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்' நிறுவனம், மஞ்சள் லைன் மெட்ரோ ரயில் வழித் தடத்தை, அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை நீட்டிக்க சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்கிறது.
அந்த வழித்தடம் நீட்டிக்கப்பட்டால், அங்கிருந்து, 11 கி.மீ., துாரத்தில் ஓசூர் உள்ளது. அதனால், எளிதாக மெட்ரோ ரயில் சேவையை தமிழக எல்லைக்குள் கொண்டு வர முடியும்.
இரு மாநிலங்களும், மெட்ரோ ரயில் சேவையால் இணைந்தால், பெங்களூரு செல்லும் பயணியருக்கான பயண நேரம் ஒரு மணி நேரம் வரை குறையும்.
அதனால், தமிழக அரசு, மெட்ரோ ரயில் திட்டத்தை தீவிரமாக கையில் எடுத்து, கர்நாடகா மாநில அரசு மற்றும் மத்திய அரசிடம் பேசி, ஓசூருக்கு மெட்ரோ ரயில் விரைவில் வருவதை உறுதி செய்ய வேண்டும் என, ஓசூர் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் 2 மெட்ரோ லைன்
பெங்களூரு போக்கு வரத்து நெரிசலை குறைக்க, நாகவாரா - கலீனா அக்ரஹாரா இடையிலும், (பிங்க் லைன்), சென்ட்ரல் சில்க் போர்டு - கெம்பேகவுடா விமான நிலையம் இடை யிலும், (புளு லைன்) மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன.
இது முடிந்தவுடன், அந்நகரின் போக்குவரத்து நெரிசல் மேலும் குறையும் என நம்பப் படுகிறது.