ADDED : அக் 28, 2024 11:55 PM

தமிழக அரசியலில் புதிய புயலாக, களம் இறங்கி இருக்கிறார் நடிகர் விஜய். அவரது அரசியல் அவதாரம், சில முக்கிய அரசியல் கட்சிகளை, கலக்கம் அடைய வைத்துள்ளது. கட்சியின் முதல் மாநாட்டுக்கு வந்திருந்த இளைஞர் கூட்டத்தை பார்த்த அரசியல் நோக்கர்கள், தமிழக அரசியலில் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என கருத்து தெரிவித்துள்ளனர்.
நம் கோவை மக்கள் என்ன சொல்கிறார்கள்?
பொறுத்து பார்ப்போம்
விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். அவர் பேசியதை பார்க்கும் போது, அரசியலில் ஏதோ சர்பிரைசாக செய்யப்போகிறார் என தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
--வேணி, 23, தனியார் நிறுவன பணியாளர்
காலம்தான் தீர்மானிக்கும்
கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில், எந்த நடிகரும் அரசியலில் பெரிதாக சாதிக்கவில்லை. எனவே விஜய் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது விஜய் ரசிகர்கள் மட்டுமே அவர் பின்னால் இருக்கின்றனர். பொதுமக்களும் வருவார்களா என்பதை, காலம் தான் தீர்மானிக்கும்.
- சவுந்தர குமார், 30, புகைப்படக்கலைஞர்
புதிய விடியல் பிறக்கும்
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியதன் மூலம் தமிழகத்தில் சரித்திரம் படைப்பார். இந்த மாநாடு, தமிழக அரசியலை புரட்டிப் போடும். தமிழகத்திற்கு புதிய விடியல் பிறக்கும்.
- தரணி பிரசாந்த், 22, ஆம்புலன்ஸ் டிரைவர்
மக்கள் துணை இருப்பர்
நடிகர் விஜய், திரைப்படத்துறையில் இருக்கும் போதே, பொதுமக்களுக்கு என பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார். அதை இன்னும் பெரியளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், அரசியலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு மக்கள் துணையிருப்பார்கள் என்பது உறுதி.
- துரை,45, டிராவல்ஸ் நிறுவனர்
ஆதரவு தொடரும்
தமிழில் உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து, பணம், புகழ் ஈட்டியிருக்கலாம். ஆனால், நடிப்பை ஒதுக்கி விட்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கட்சி ஆரம்பித்திருப்பது, பெரிய விஷயம். மக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும். வரும் தேர்தலில், கட்சி, மிகப்பெரிய சாதனையை எட்டும்.
- தமிழ்,30, காய்கறி கமிஷன் மண்டி
முதல்வர் ஆவார்
நடிகர் விஜய் கண்டிப்பாக சாதிப்பார். அவர் தமிழகத்தின் முதலமைச்சராக நிச்சயம் ஆவார். அவருக்கு எல்லா தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர். விஜய்க்கு ரசிகர்கள் மட்டுமில்லை, மாற்றத்தை விரும்புவோர் அனைவரின் ஆதரவும் உள்ளது.
- மாரிச்செல்வம், 23, தனியார் ஊழியர்
பொறுத்திருந்து பார்ப்போம்
இளைஞர்கள் மத்தியில் விஜய் கட்சிக்கு வரவேற்பு உள்ளது. விஜய்க்கு முன் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்து காணாமல் போய் உள்ளனர். இவர் சாதிப்பாரா, சறுக்குவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
- சோமு, 49, தனியார் ஊழியர்
நம்பிக்கை உள்ளது
நடிகர் விஜய் அரசியல் துவங்குவதற்கு முன்பு இருந்து, மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். அவரது கையில் ஆட்சி கிடைத்தால், மக்களின் கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டின் தலையெழுத்தை மாற்றும் இளைஞர்களின் ஆதரவு, அவருக்கு உள்ளது.
- - -காயத்ரி, 36, டாக்டர்
அக்கறை வருமா?
நடிகர் விஜய் தனது ரசிகர்களை பயன்படுத்திக் கொள்கிறார். எந்த தலைவரும் தனது பணியை விட்டு விட்டு, மாநாட்டிற்கு அழைத்தது இல்லை. ரசிகர்கள் மீது அக்கறை இல்லாதவருக்கு, மக்கள் மீது அக்கறை வருமா என தெரியவில்லை.
- சிந்துஜா, 32, ஐ.டி., ஊழியர்
நல்லாட்சி உறுதி
விஜயை வைத்து படம் எடுக்க, தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். அவரது மார்க்கெட்டும் இழக்கவில்லை. ஆனால் அவரது தொழிலை விட்டு, மக்கள் மீது அக்கறை கொண்டு கட்சி துவங்கியது வரவேற்கத்தக்கது. அவரது தலைமையில் நல்லாட்சி அமைவது உறுதி.
- விஷ்ணு பிரியா, 34, ஸ்டுடியோ டிசைனர்
நல்லது செய்வார்
விஜய் கட்சி ஆரம்பித்தது மகிழ்ச்சியாக உள்ளது. கட்டாயம் அவர் நல்லது செய்வார். மாநாட்டில் அவர் பேசியதில் இருந்தே, அவரது தெளிவு புரிந்திருக்கும். யாரும் செய்யாததை அவர் செய்வார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. 2026 தேர்தலில் அவர் வெல்வார்.
- கண்ணன், 39, ஓட்டல் ஊழியர்
இளைஞர்கள் வெயிட்டிங்
கட்சி துவங்கியுள்ளார். நல்ல விசயம் தான். நல்லது செய்தால் வரவேற்க வேண்டும். மற்றவர்கள் போல அவரும் ஊழல் அரசியல் செய்தால் நிலைக்க மாட்டார். இளைஞர்கள் அவருக்கு பெரும் ஆதரவை அளிக்க காத்திருக்கின்றனர். மக்களுக்கு நல்ல விசயங்களை செய்ய வேண்டும். நல்லது நடக்காதா என காத்திருக்கின்றனர். அதை உண்மையாக்க வேண்டும்.
- சஜி, 55, டிரைவர்
கட்சியால் நமக்கென்ன?
யார் கட்சி ஆரம்பித்தால் என்ன. நம் தொழிலை நாம் பார்த்தால் தான் நமக்கு சாப்பாடு. நாம் உழைத்தால் மட்டுமே, நாம் உயர முடியும். கட்சி ஆரம்பிப்பது அவர்கள் நன்மைக்கு. அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
- சகாப்தியன், 66, கூலித்தொழிலாளி
வாய்ப்பு கொடுக்கணும்
இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏன் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுக்கும் மாற்றி மாற்றி வாய்ப்பு கொடுக்கணும்? இந்த முறை விஜய்க்கு கொடுக்கலாம்.
- அர்ஷத், 37, தனியார் நிறுவன மேலாளர்
ஆதரிக்க வேண்டும்
சினிமா நடிகர்கள் மார்க்கெட் போன பிறகுதான், அரசியலுக்கு வருவார்கள். ஆனால் விஜய்க்கு இன்னும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. இப்போதும் அவர் படங்கள் நன்கு ஓடுகின்றன. பல கோடி ரூபாய் வருமானத்தை விட்டு விட்டு வந்து இருக்கிறார். அவரை நாம் ஆதரிக்க வேண்டும்.
-- பிரகாஷ்,38, பார்மா கம்பெனி மேலாளர்