லோக்சபா தேர்தலில் வேலை செய்யாதோருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் குழுவில் இடமா?: பா.ஜ.,வுக்குள் குமுறல்
லோக்சபா தேர்தலில் வேலை செய்யாதோருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் குழுவில் இடமா?: பா.ஜ.,வுக்குள் குமுறல்
ADDED : அக் 24, 2025 02:05 AM

மதுரை: தமிழகத்தில், 234 தொகுதிகளுக்கும் பா.ஜ., சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் குழு மீது, கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர், அமைப்பாளர், இணை அமைப்பாளர் என மூவர் குழுவை 234 தொகுதிகளுக்கும் தமிழக பா.ஜ., அறிவித்துள்ளது.
இந்த நியமனத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், ஒவ்வொரு லோக்சபா தொகுதி மற்றும் அத்தொகுதிக்குள் இருக்கும் சட்டசபை தொகுதிகளுக்கு பொறுப்பாளர் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
அவற்றில் இருந்த பலர், தங்கள் தொகுதியில் பணியாற்றவில்லை; பிடிக்காத வேட்பாளராக இருந்தால், வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.
இவர்களில் யார் மீதும் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் வேலை செய்ய மறுத்தவர்களுக்கு, இப்போதும் சட்டசபை தேர்தல் பொறுப்பாளர் குழுவில் ப தவி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, லோக்சபா தேர்தலில், பா.ஜ., மேலிடத்தில் இருந்து, தொகுதிவாரியாக அனுப்பிய தேர்தல் செலவுக்கான பணத்தை நிர்வாகிகள் பலர் முறைகேடு செய்தனர். திருமங்கலம் தொகுதியில் பா.ஜ., நிர்வாகிகளே போஸ்டர் அடித்து ஒட்டி, பிரச்னை பூதாகரமானது.
லோக்சபா தேர்தலுக்கு பின், சென்னையில் பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த கூட்டத்திலும், இதுபற்றி புகார்கள் குவிந்தன. அப்போதைய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் இது பற்றி பேசினர். எனினும், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், அப்போது குற்றம் சாட்டப்பட்டோருக்கே, தற்போது சட்டசபை தேர்தலுக்கான பொறுப்புக் குழுவிலும் இடம் கொடுத்துள்ளனர்.
எனவே, முறையாக கட்சிப் பணியாற்றுவோருக்கும் முறைகேடு செய்தவர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என கட்சிக்குள் குமுறல் எழுந்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

