பாரதிய ஜனதாவில் அனைத்து நிலைகளிலும் பெண் சக்தி ! முழுமையாக மாறுகிறது கட்சி கட்டமைப்பு
பாரதிய ஜனதாவில் அனைத்து நிலைகளிலும் பெண் சக்தி ! முழுமையாக மாறுகிறது கட்சி கட்டமைப்பு
ADDED : ஜன 12, 2025 11:57 PM

புதுடில்லி: பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, பெண் வேட்பாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக தற்போதே தயாராகிறது பா.ஜ., தலைமை. கட்சியின் அனைத்து நிலைகளிலும், பெண் நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளது.
பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் மசோதா, கடந்தாண்டு பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்து, அதன்பின் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பின், இது நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021ல் நடக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தாண்டில் அது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உட்கட்சி தேர்தல்
இந்நிலையில், பா.ஜ.,வின் புதிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கடந்த 2020 முதல் தலைவராக உள்ள நட்டாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்து விட்டது.
மேலும், தற்போது மத்திய அமைச்சராகவும் அவர் உள்ளார். அதனால், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மிக விரைவில் நடக்க உள்ளது.
அதற்கு முன்னதாக, கட்சியின் அனைத்து மாநிலங்களிலும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
குறைந்தபட்சம், 50 சதவீத மாநிலங்களில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இந்த மாத இறுதிக்குள், கட்சியின் 37 மாநில அமைப்புகளில், 30ல் உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது நடைமுறைக்கு வரும்போது, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு வசதியாக, கட்சியின் அனைத்து நிலைகளிலும், பெண் நிர்வாகிகளை அதிகரிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
கட்சியின் பூத் நிலையில் இருந்து, மாவட்டங்கள், மாநில நிலைகள் வரை, பெண் நிர்வாகிகளை அதிகரிக்க தற்போது முயற்சி நடந்து வருகிறது.
எதிர்காலத்தில் கட்சியின் நிர்வாகிகள், பெண்களுக்கான தொகுதிகளில் தங்கள் குடும்பத்து பெண்களை நிறுத்த நெருக்கடி கொடுப்பதை தடுக்கும் வகையில், தற்போதே கட்சியில் பெண் நிர்வாகிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
உரிய பிரதிநிதித்துவம்
இதன் வாயிலாக அவர்கள் தேர்தல்களுக்கு தயாராவதற்கு போதிய அவகாசம் கிடைக்கும். மேலும், உடனடியாக கட்சியின் அனைத்து நிலைகளிலும், 33 சதவீதம் அளவுக்கு பெண் நிர்வாகிகளை நியமிக்க முடியாது.
அதற்கு, கட்சியின் வலுவான தலைவர்களின் எதிர்ப்பு எழும் அபாயம் உள்ளது. அதனால், படிப்படியாக அனைத்து நிலைகளிலும், பெண் நிர்வாகிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, பூத் நிலையிலான குழுக்களில் 11 உறுப்பினர்கள் இருப்பர். இதில், பெண்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுபோல, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கும் அவற்றில் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுபோல, மாவட்ட தலைவர்களில் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த, அந்தந்த மாநில அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பா.ஜ.,வின் கட்சி அளவிலான கட்டமைப்பில், மத்திய பிரதேசம் ஒரு மாதிரி மாநிலமாக பார்க்கப்படுகிறது. அங்குள்ள 62 மாவட்டங்களில், தற்போது பெண்கள் யாரும் மாவட்டத் தலைவராக இல்லை.
அதனால், இங்கு குறைந்தபட்சம், எட்டு மாவட்டங்களின் தலைவர்களாக பெண்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல, பீஹாரில் தற்போது இரண்டு பெண் மாவட்டத் தலைவர்களே உள்ளனர்; அந்த எண்ணிக்கையையும் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.