விஜய் பின்னால் செல்கிறீர்களே; பிரசங்கத்தில் பாதிரியார் புலம்பல்
விஜய் பின்னால் செல்கிறீர்களே; பிரசங்கத்தில் பாதிரியார் புலம்பல்
ADDED : டிச 23, 2025 06:12 AM

துாத்துக்குடி: சர்ச் திருவிழாவில் பங்கேற்ற பாதிரியார் ஒருவர், 'எல்லாரும் விஜய் பின்னால் செல்கிறீர்களே' என, பிரார்த்தனையின்போது பேசினார். அதற்கு, 'சர்ச்சில் அரசியல் பேச வேண்டாம்' என, அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள சர்ச்சில், நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது. பாதிரியார் அலாய்சியஸ் முன்னிலையில், திருநெல்வேலி செயின்ட் சேவியர்ஸ் கல்லுாரி முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் சிறப்பு பிரசங்கம் செய்தார்.
அவர் பேசுகையில், “நம் பிள்ளைகள் அனைவரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர். 41 பேரை கொன்று குவித்தவனுக்கு, கையில் விலங்கிட்டவர் போல கைக்காட்டும் தலைவரான விஜய் பின்னால் செல்லும் கூட்டம் அதிகமாகுகிறது.
“நான் விஜய்க்கு எதிரி அல்ல, ஆனால், நம் இளைஞர்கள், குழந்தைகள் எல்லாம் சினிமா நடிகர் பின்னால் ஏன் போய் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வியை கேட்க வேண்டும். பாரம்பரியம் என்பது இன்றோடு, நேற்றோடு முடிவது அல்ல. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்,” என்றார்.
பாதிரியார் காட்வின் ரூபஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த த.வெ.க., தொண்டர்கள், சர்ச் பாதிரியார் அலாய்சியஸிடம் புகார் தெரிவித்தனர். 'சர்ச்சை, அரசியல் மேடையாக்க வேண்டாம், பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அவர் வீடியோ வெளியிட வேண்டும்' என இளைஞர்கள் முறையிட்டனர்.
மேலும், 'ஒரு வழக்கு சி.பி.ஐ., விசாரணையில் இருக்கும் போது, மக்கள் மத்தியில் அவதுாறு பரப்புவது, உள்நோக்கத்துடன் செயல்படும்ஒரு கிரிமினல்குற்றம்' என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
'பாதிரியார் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, தி.மு.க., ஏஜன்டாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது' என, த.வெ.க., தொண்டர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

