தேர்தல் கமிஷனின் சேவைகளை இனி ஒரே செயலியில் பெறலாம்
தேர்தல் கமிஷனின் சேவைகளை இனி ஒரே செயலியில் பெறலாம்
ADDED : மே 05, 2025 12:40 AM

புதுடில்லி: தேர்தல் கமிஷன் தற்போது பயன்பாட்டில் உள்ள வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான தனித் தனியான 40 மொபைல் மற்றும் இணைய செயலிகளை ஒருங்கிணைத்து, ஒரே டிஜிட்டல் செயலியாக உருவாக்கி உள்ளனர்.
தலைமை தேர்தல் கமிஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம், தேர்தல் கமிஷனின் சேவைகளை டிஜிட்டல் தளத்தில் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.
இந்த நிறுவனம், வாக்காளர்கள் உதவிக்காக, ஓட்டர் ஹெல்ப்லைன் செயலி, ஓட்டுப்பதிவு விபரங்களை தெரிந்துகொள்ள ஓட்டர் டர்ன்அவுட் செயலி, தேர்தல் நடத்தை விதிமீறல்களை மக்கள் புகாரளிக்க சிவிஜில் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை அறிமுகப்படுத்தியது.
அரசியல் கட்சிகள் தேர்தல் சமயத்தில் பல்வேறு அனுமதிகளை பெற சுவிதா என்ற செயலியும் தேர்தல் கமிஷனால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அனைத்து செயலிகளும் மொத்தம் 5.5 கோடி பதிவிறக்கங்களை பெற்றுள்ளன.
ஒருவர் மொபைலில் பல செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அனைத்து சேவைகளையும் ஒரே செயலியின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்வர் முன்மொழிந்தார்.
இதையடுத்து தேர்தல் கமிஷன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, 40க்கும் மேற்பட்ட மொபைல் மற்றும் இணைய செயலிகளை ஒருங்கிணைத்து, ஒரு புதிய டிஜிட்டல் செயலியாக வடிவமைத்துள்ளனர். இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என, தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்துள்ளது.

