/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி நகர கூட்டு குடிநீர் திட்டம் முடங்கியது: செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
/
புதுச்சேரி நகர கூட்டு குடிநீர் திட்டம் முடங்கியது: செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
புதுச்சேரி நகர கூட்டு குடிநீர் திட்டம் முடங்கியது: செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
புதுச்சேரி நகர கூட்டு குடிநீர் திட்டம் முடங்கியது: செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
ADDED : ஏப் 25, 2024 11:53 PM

புதுச்சேரி மாநிலம் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நிலத்தடி நீரையே பெரிதும் சார்ந்துள்ளது. மாநிலத்தில் தனி நபருக்கு தினசரி கிராம பகுதியில் 80 லிட்டரும், நகர பகுதியில் 135 லிட்டர் தண்ணீர் தற்போது வழங்கப்படுகிறது.
தேசிய அளவில் ஒப்பிடுகையில், இது மிக அதிகம். நீர் வளம் நிறைந்த மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களில் கடலோர கிராமங்களில் வேகமாக உவர் நீராக மாறி வருகிறது. எதிர்காலத்தில் பெரும் சிக்கலை புதுச்சேரி நகர பகுதிகள் சந்திக்க உள்ளன.
இதனால், கிராமப்புறங்களில் இருந்து புதுச்சேரி நகர பகுதிக்கு குடிநீர் கொண்டு வர ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டமான ஏ.எப்.டி.,திட்டம் ரூ.540 கோடியில் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இதற்கு முதல் கட்டமாக 49 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் கிராமப்புறங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்த ஆய்வு பணிகள் துவங்கியது.ஆனால் விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
அடுத்து கிராமப்புறங்களை தவிர்த்து, ஆற்றக்கரைகளில் ஆழ்துளை கிணறு அமைத்து, நகர பகுதிக்கு தண்ணீர் கொண்டுவர திட்டமிடப்பட்டது.
அதற்கும் எதிர்ப்பு கிளம்பியதால் இத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரியில் ஆகா., ஓகோவென பெரிய கனவுகளுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க மத்திய அரசு கடந்த 2017ல் அனுமதி கொடுத்தது.அதன்படி, புதுச்சேரி நகர பகுதியில் 1,468 ஏக்கர் பரப்பளவில் திட்ட மதிப்பீடு 1,828 கோடி ரூபாயில் பணிகள் நடக்க வேண்டும். இருக்கின்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை வைத்துக்கொண்டு இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்தி இருக்கலாம்.
ஆனால் பிளான் போடுகின்றோம் என, பல ஆண்டுகளை ஜவ்வாக இழுத்தனர். இறுதியில் சரியான திட்டமிடல் இல்லாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ரூ.620 கோடியாக சுருங்கி விட்டது.
மாநிலத்தில் வரியில்லாமல் ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
ஜி.எஸ்.டி., கலால், பத்திரபதிவு, போக்குவரத்து துறைகளை தவிர்த்து பார்த்தால் சொல்லிக்கொள்ளும்படி மாநிலத்திற்கு சொந்த வருவாய் இல்லை. மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது.
மற்றொரு பக்கம், சரியான திட்டமிடல் இல்லாததால், பல கோடி ரூபாய் திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல், கடைசியில் கைவிடுவதை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.
அந்த வரிசையில் இப்போது ஏ.எப்.டி.,திட்டமும் சேரும் அபாயம் எழுந்துள்ளது.
எந்த ஒரு திட்டங்களை கொண்டு வந்தாலும் அதற்கு சிறிய எதிர்ப்பு இருக்கத் தான் செய்யும். அப்பிரச்னைக்கு ஆரம்பத்திலேயே தீர்வு கண்டால் தான் தொலைநோக்கு பார்வையுடன் மாநிலத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையெனில் எந்த ஒரு திட்டத்தில் சிறிய துரும்பை கூட நகர்த்த முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.
என்ன செய்யலாம்
கிராமங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் நுாற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் உள்ளன.
இந்த ஆழ்துளை கிணறுகளை ஒருங்கிணைத்து ஏ.எப்.டி., திட்டத்தை செயல்படுத்தலாம். இத்திட்டத்திற்கு ஆழ்துளை கிணறு தரும் விவசாயிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கணிசமான வருவாய் தரலாம். இது தொடர்பாக விவசாயிகளின் கருத்தை கேட்க வேண்டும்.
இதன் மூலம் ஆழ்துளை விவசாயிகளுக்கு வருவாய் கிடைப்பதோடு, ஏ.எப்.டி., திட்டமும் செயல்பாட்டிற்கு வந்து நகரின் குடி நீர் பிரச்னையும், நிலத்தடிநீர் கண்டமேனிக்கு உறிஞ்சுவதும் தடுக்கப்படும்.
இது தொடர்பாக நகர்புறம் மற்றும் கிராமப்புற எம்.எல்.ஏ.கள் ஒருங்கிணைந்த கமிட்டினை அமைத்து, விவசாயிகள், கிராமப்புற மக்களுடன் கலந்து பேசி, ஏ.எப்.டி., திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இல்லையெனில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை போன்று, ஏ.எப்.டி.,திட்டத்தையும்புதுச்சேரி அரசு கைவிட வேண்டிஇருக்கும்.

