ADDED : ஜூலை 11, 2026 08:01 PM
திருக்கனுார்: கொடாத்துாரில் மின்கசிவு காரணமாக 10 ஏக்கர் சவுக்கு தோப்பு தீ பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.
திருக்கனுார் அடுத்த கொடாத்துார், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சசிதரன், 52. இவர் அக்கிராமத்தின் சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் உள்ள தனது நிலத்தில் சவுக்கு சாகுபடி செய்துள்ளார்.
இவரது சவுக்கு தோப்பின் வழியாக செல்லும் மின்கம்பிகளில் இருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக சவுக்கு தோட்டம் திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த திருக்கனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் சவுக்கு தோப்பு முழுதும் எரிந்து சேதமடைந்ததுடன், அருகில் இருந்த அதே கிராமத்தை சேர்ந்த இருசப்பன் உள்ளிட்ட 10 பேரின் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 10 ஏக்கர் சவுக்கு தோப்பு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவைகளுக்கு சேதம் ஏற்படும் போது, அதனை கணக்கீடு செய்து, அரசு இழப்பீடு வழங்குவது போன்று சவுக்கு பயிர்களுக்கும் சேதம் ஏற்படும் போது அதனை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்கவும், காப்பீடு திட்டத்தில் சவுக்கு பயிரை சேர்க்கவும் வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
